ஈரோடு வெண்டிபாளையம் குப்பைக் கிடங்கில் பயங்கர தீ: புகை மூட்டத்தால் பொதுமக்கள் அவதி
வெண்டிபாளையம் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து.
ஈரோடு வெண்டிபாளையம் குப்பைக் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. நச்சு புகையால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
ஈரோடு மாநகர் பகுதியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. இங்கு சேகரிக்கப்படும் குப்பைகள் பாதி வெண்டிபாளையம் குப்பைக் கிடங்கிலும், மீதி வைராபாளையம் குப்பைக் கிடங்கிலும் கொட்டப்பட்டு வருகிறது. இதன் காரணமாக வெண்டிபாளையம் குப்பைக் கிடங்கில் குப்பைகள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டு உள்ளன. இந்த குப்பைக் கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால் அதனை சுற்றி உள்ள பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வந்தனர்.
இதனால் இந்த குப்பைக் கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். மேலும் அவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களிலும் ஈடுபட்டனர். அதனால் வெண்டிபாளையம் குப்பைக் கிடங்கில் குப்பை சேருவதை தடுக்கும் வகையில், மாநகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகளை உரமாக்கும் பணி நடந்து வருகிறது. இதன் காரணமாக குப்பைக் கிடங்கில் தற்போது ஓரளவு குப்பைகள் குறைந்துள்ளது.
மேலும், மாநகர் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என்று தரம் பிரித்து வெண்டிபாளையம் குப்பை கிடங்குக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்தநிலையில், திங்கட்கிழமை (இன்று) மதியம் திடீரென வெண்டிபாளையம் குப்பைக் கிடங்கு தீப்பிடித்து எரியத் தொடங்கியது. கடுமையான கோடைக் காலம் என்பதாலும், காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதாலும், மலைபோல் டன் கணக்கில் தேங்கியுள்ள குப்பையில் தீ பரவி எரித்தது.
இந்த பயங்கர தீயால் குப்பை கிடங்கில் இருந்து அதிக அளவில் கரும்புகை வெளியேறியது. இந்தப் புகை ஈரோடு மாநகர பகுதிக்கு உட்பட்ட 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு பரவியது. இதன் காரணமாக, வெண்டிபாளையம், மரப்பாலம், இந்திரா நகர், கருங்கல்பாளையம் பகுதியில் வசிக்கும் மக்கள் மூச்சுத்திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டு அவதி அடைந்தனர். இதைத்தொடர்ந்து, குப்பை கிடங்கில் பணியாற்றும் மாநகராட்சி ஊழியர்கள் ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில், ஈரோடு தீயணைப்பு நிலையத்தில் இருந்து 2 வண்டிகளும், மொடக்குறிச்சி தீயணைப்பு நிலையத்தில் இருந்து ஒரு வண்டியும் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் ஒருபுறம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாலும் கூட தீயை அனைத்தும் அனுபவம் உள்ள மாநகராட்சி ஊழியர்களும் குப்பை கிடங்கில் இருக்கும் தண்ணீர் சேமிக்கும் இடத்தில் இருந்து தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த தீ விபத்து குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும் போது தற்போதைய சூழ்நிலையில் தீயை கட்டுப்படுத்த திணறி வருவதாகவும், கோடைக் காலம் என்பதாலும், காற்று வேகம் அதிகமாக இருப்பதாலும் தீயை அணைக்கும் பணியில் சற்று சிரமம் ஏற்பட்டது என தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu