ஈரோடு: ஓடத்துறை ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற கலெக்டர்
பவானி வட்டம், ஓடத்துறை சோமசுந்தரம் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பேசிய போது எடுத்தபடம்.
ஈரோடு மாவட்டம், பவானி வட்டம் ஓடத்துறை ஊராட்சியில் சோமசுந்தரம் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, கிராம மக்களுடன் கலந்துரையாடினார்.
இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, நவம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சிகள் தினமாக கொண்டாடிட வேண்டும் என அறிவித்ததைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்திற்குட்பட்ட 14 ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 225 கிராம ஊராட்சிகளில் இன்று முதன்முறையாக சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. அந்த வகையில், ஆண்டுதோறும் ஜனவரி -26, மார்ச் - 22, மே - 1, ஆகஸ்ட் -15, அக்டோபர் - 2 மற்றும் நவம்பர் 1 ஆகிய ஆறு நாட்கள் கிராம சபை கூட்டம் நடத்திட உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி இன்று (01.11.2022) உள்ளாட்சிகள் தினத்தையொட்டி நடைபெறும் சிறப்பு கிராம சபை கூட்டத்தில், கிராம ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த தூய்மைக் காவலர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்களை சிறப்பித்தல், கிராம ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்களை கௌரவித்தல், 2021-22 மற்றும் 2022-23-ஆம் ஆண்டு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-II-ன் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள பணிகளின் முன்னேற்ற விவரத்தினை கூட்டத்தில் வைத்தல், கலைஞர் வீடு வழங்கும் திட்ட கணக்கெடுப்பு பணி முடிவுற்ற விவரத்தினை கிராம சபைக்கு தெரிவித்தல், ஜல் ஜீவன் திட்டத்திற்கு நம் ஊராட்சியில் உள்ள அனைவரும் தவறாமல் சமுதாய பங்களிப்பினை செலுத்தி இத்திட்டத்தின் செயல்பாட்டில் துணை நிற்போம் தீர்மானம் என நிறைவேற்றுதல் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும், மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலம் கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ள / எடுக்கப்பட வேண்டிய பணிகளுக்கு கிராம சபையில் ஒப்புதல் பெறுதல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், இணையவழி வீட்டுவரி / சொத்துவரி செலுத்துதல், மகளிர் சுய உதவிக் குழு உருவாக்குதல், 2021-22 மற்றும் 2022-23 ஆகிய ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் பண்ணை மற்றும் பண்ணை சாரா திட்ட இனங்களின் மேற்கொள்ளப்பட்ட நிதிசெலவின அறிக்கை, பயனாளிகள் விவரம் மற்றும் நிதி பயன்பாடு குறித்து அறிக்கை அளித்தல், மக்கள் நிலை ஆய்வுப் பட்டியலில் விடுபட்ட / புதிய இலக்கு மக்கள் குடும்பங்களை சேர்த்தல் மற்றும் இதர பொருட்கள் உள்ளிட்ட கூட்டப்பொருட்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில், கலெக்டர் வேளாண்மை துறையின் சார்பில் 2 விவசாயிகளுக்கு உயிர் உரங்களையும், தோட்டக்கலைத் துறையின் சார்பில் 1 விவசாயிக்கு கால மஞ்சள் பரப்பு விரிவாக்க இடுப்பொருள்களையும், கால்நடை பராமரிப்பு துறையில் சார்பில் 10 விவசாயிகளுக்கு தாது உப்புக்கள் கலவையினையும், மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் 5 நோயாளிகளுக்கு மாத்திரை பெட்டகத்தினையும், கூட்டுறவுத்துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு தலா ரூ.1.00 இலட்சம் வீதம் ரூ.3.00 மதிப்பில் முத்ரா மற்றும் மத்திய கால கடன்களையும், 7 பயனாளிகளுக்கு ரூ.11,87,204/- மதிப்பீட்டில் பயிர்கடன்களையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 9 நலிவுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,25,000/- மதிப்பில் ஆடுவளர்ப்பு மற்றும் நெசவு தொழில் செய்வது கடனுதவிகளையும், வேலைவாய்ப்பு / தொழில் வாய்ப்பு இழந்த புலம்பெயர்ந்து திரும்பிய 5 நபர்களுக்கு ரூ.5.00 இலட்சம் மதிப்பில் புதிய தொழில் துவங்குவதற்கான கடனுதவிகளையும், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் சமுதாய பண்ணை பள்ளி அமைக்க ரூ.64,000/-ம் மற்றும் தனிநபர் 5 தொழில் மேற்கொள்ளும் முனைவோர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார்.
மேலும், 10 மற்றும் 12ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவியர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழையும், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் பேச்சு போட்டியில் முதலிடம் பெற்ற செல்வி அபிஷனா என்ற மாணவிக்கு பாராட்டு சான்றிதழையும், சிறப்பாக பணியாற்றிய தூய்மை காவலர்கள் பணியாளர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழையும் மற்றும் சிறப்பாக செயல்பட்ட மகளிர் சுய உதவி குழுவிற்கு பாராட்டு சான்றிதழையும் வழங்கினார்.
தொடர்ந்து, பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களைப் பெற்று உரிய அலுவலர்களிடம் வழங்கினார். மேலும், கலெக்டர் தலைமையில், இலஞ்ச ஒழிப்பு உறுதிமொழியினை பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் ஏற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் நவமணி கந்தசாமி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சூர்யா, இணை இயக்குநர் (வேளாண்மை) சின்னசாமி, கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் நர்மதா, செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல் துறை) விஸ்வநாதன், ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோபாலகிருஷ்ணன், மாரிமுத்து, பவானி வட்டாட்சியர் ரவிச்சந்திரன் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu