நம்பியூர்: அத்திக்கடவு - அவிநாசி திட்ட நீரேற்று நிலையத்தில் அமைச்சர் ஆய்வு

Erode news, Erode news today- அத்திக்கடவு - அவிநாசி திட்ட 5-ம் நீரேற்று நிலையத்தினை அமைச்சர் முத்துசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Erode news, Erode news today- ஈரோடு மாவட்டம், நம்பியூர் வட்டத்திற்குட்பட்ட எம்மாம்பூண்டியில் அமைந்துள்ள அத்திக்கடவு அவிநாசி திட்ட 5-ம் நீரேற்று நிலையத்தினை மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமையில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி நேற்று (சனிக்கிழமை) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், இதுகுறித்து அவர் கூறியதாவது, விவசாய பெருங்குடி மக்கள் பயன்பெறும் வகையில், அத்திக்கடவு அவிநாசி திட்டமானது பவானி ஆற்றில் காளிங்கராயன் அணைக்கட்டின் கீழ்புறத்திலிருந்து ஆண்டொன்றிக்கு 1.50 டி.எம்.சி உபரிநீரை நீரேற்றுமுறையில் நிலத்தடியில் குழாய்பதிப்பின் மூலம் கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மொத்தம் 24,468 ஏக்கர் நிலம் பயன்பெறும் வகையில் 32 பொதுப்பணித்துறை ஏரிகள், 42 ஊராட்சி ஒன்றிய ஏரிகள் மற்றும் 971 குளம் குட்டைகள் என மொத்தம் 1045 குளங்களுக்கு நீர் நிரப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போது 99% சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. திட்டப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பவானி ஆற்றின் குறுக்கே திருப்பணை மற்றும் ஆறு நீர்உந்து நிலையங்களுக்கான பவானி, நல்லக்கவுண்டன்பாளையம், திருவாச்சி, போலநாயக்கன்பாளையம், எம்மாம்பூண்டி, அன்னூர் ஆகிய இடங்களில் கட்டுமானப் பணிகள் முடிவடைந்துள்ளது. மேலும், MS குழாய் பதிக்கும் பணிகள் 267.5 கி.மீ. நீளத்திற்கு முடிவடைந்துள்ளது (மொத்த நீளம் 267.5 கி.மீ) மற்றும் HDPE குழாய்கள் பதிக்கும் பணிகள் தற்போத துரிதமாக நடைபெற்று வருகிறது.
தற்சமயம் சுமார் 797.11 கி.மீ. அளவு HDPE குழாய் மொத்த நீளம் 797.8 கி.மீ) பதிக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மின்மாற்றிகள், VT பம்புகள், மின்மோட்டார்கள். சுவிட்ச்கியர் மற்றும் பேனல் போர்டு ஆகியவை அனைத்து நீர்உந்து நிலையங்களிலும் பொருத்தப்பட்டுள்ளது. மின்கம்பங்கள் அமைக்கும் பணி மற்றும் பூமிக்கடியில் மின்சார தொடரமைப்புகள் பதிக்கும் பணி 100 சதவீதம் முடிவுற்றுள்ளது (மொத்த நீளம் 63.15 கி.மீ).
மேலும், நிலம் பயன்பாட்டு உரிமை (RIGHT OF USE) பெறும்பணி 100 சதவீதம் முடிவுற்றுள்ளது. இது தொடர்பாக நடைபெற்ற நீர்வளத்துறை உயர்மட்டக் கூட்டத்தின் நிகழ்வு குறிப்பு அறிக்கை தலைமைச் செயலாளர், தமிழ்நாடு அரசு அவர்களால் ஒப்புதல் அளிக்கப்பட்டு திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. குளம் குட்டைகளில் Outlet Management System (OMS) பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்சமயம் சுமார் 1044 எண்கள் பொருத்தப்பட்டுள்ளது (மொத்தம் 1045 எண்கள்). இத்திட்டத்திற்கு இதுவரை ரூ.1624.69 கோடி அளவில் செலவீனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 20.02.2023 முதல் சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டு தற்போது வரை ஆறு நீரேற்று நிலையங்கள் மற்றும் பிரதானக் குழாய்களில் 106.80 கி.மீ நீளத்திற்கு சோதனை ஓட்டம் முடிக்கப்பட்டுள்ளது.
மேலும், நீரேற்று நிலையங்களிற்கு இடையிலுள்ள கிளைக் குழாய் (Feeder Line) மற்றும் 1045 குளம் குட்டைகளில் பொருத்தப்பட்டுள்ள OMS கருவிகளில் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர் சரியான முறையில் செல்கிறதா என்பது குறித்து ஆய்வுப்பணிகள் அலுவலர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து பணிகளும் விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வர தொடர்புடைய அலுவலர்கள் தங்களது பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து, அமைச்சர் முத்துசாமி எம்மாம்பூண்டியில் அமைந்துள்ள அத்திக்கடவு - அவிநாசி திட்ட 5-ம் நீரேற்று நிலையத்திலிருந்து சோதனை ஓட்டமாக அருகில் உள்ள குளத்திற்கு நீர் செல்வதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வின்போது, நீர்வளத்துறை செயற்பொறியாளர்கள் மன்மதன் (பெருந்துறை), நரேந்திரன் (அவிநாசி), நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu