ஈரோடு தறிப்பட்டறை தொழிலாளி கொலை வழக்கில் 4 பெண்கள் உள்ளிட்ட 7 பேருக்கு ஆயுள் தண்டனை..
ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளிகளை போலீசார் அழைத்து சென்ற போது எடுத்த படம்.
ஈரோடு பெரியசேமூர் கல்லாங்கரடு ஸ்ரீராம்நகர் 8 ஆவது தெருவைச் சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 25). தறிப்பட்டறை தொழிலாளி. இவரது மனைவி நீலாவதி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். செல்வகுமாரின் பெரியப்பா மகன் மணிகண்டன் அதே பகுதியில் மனைவி லட்சுமி என்பவருடன் வசித்து வருகிறார்.
மணிகண்டனுக்கும், லட்சுமிக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக லட்சுமி கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3 ஆம் தேதி, யாரிடமும் சொல்லாமல் வீட்டில் இருந்து வெளியேறினார். அவரது கணவர் மணிகண்டன் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தபோது, சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அடேரி கிராமத்தில் லட்சுமி இருப்பதாக தகவல் கிடைத்தது.
இதையெடுத்து, மணிகண்டன் மற்றும் அவருக்கு உதவியாக செல்வகுமார், நீலாவதி, செல்வகுமாரின் அக்காள் ஆனந்தி ஆகியோர் ஆத்தூருக்கு சென்று லட்சுமியை ஈரோட்டிற்கு அழைத்து வந்து, மணிகண்டனுடன் சேர்த்து வைத்தனர். லட்சுமியும் மணிகண்டனும் சேர்ந்தது, லட்சுமியின் அக்காவான பெரியசேமூர் கல்லாங்கரடு பகுதியை சேர்ந்த ஜோதிமணி (35) என்பவருக்கு பிடிக்கவில்லை.
இதனால், லட்சுமியை அழைத்து வர மணிகண்டனுக்கு உதவிய செல்வகுமாரின் வீட்டுக்கு சென்று தகாத வார்த்தையால் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் செல்வகுமாருக்கும். ஜோதிமணிக்கும் இடையே விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில், 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி செல்வகுமார், அவரது மகன், அக்காள் மகனை அழைத்துக் கொண்டு டூவீலரில் ஜோதிமணி வீட்டின் வழியாக சென்றார்.
அப்போது ஜோதிமணி, அவரது தங்கை பரமேஸ்வரி (32), தாய் பாப்பம்மாள் (70), தந்தை கண்ணையன் (74) ஆகியோர் செல்வகுமாரை தடுத்து நிறுத்தி மீண்டும் வாக்குவாதம் செய்ததில், கைகலப்பு ஏற்பட்டது. இந்த சத்தம் கேட்டு வந்த மணிகண்டனின் மனைவி லட்சுமி, அருகில் உள்ள தறிப்பட்டறையில் வேலை பார்த்த மேஸ்திரி குமரேசன் (40), ஜோதிமணியின் தம்பி மூர்த்தி (30), மூர்த்தியின் மாமனார் அண்ணாதுரை (40) ஆகியோரை அழைத்து வந்து, கத்திரிக்கோல், இரும்பு குழாய், கட்டை, கம்பு. கல் ஆகியவற்றை கொண்டு செல்வகுமாரை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதில், படுகாயம் அடைந்த செல்வகுமாரை அப்பகுதியை சேர்ந்தவர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு செல்வகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஈரோடு வடக்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்து செல்வகுமாரை கொலை செய்துவிட்டு தலைமறைவான ஜோதிமணி, லட்சுமி, பரமேஸ்வரி, குமரேசன், அண்ணாதுரை, மூர்த்தி, பாப்பம்மாள், கண்ணையன் ஆகிய 8 பேரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை ஈரோடு முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கண்ணையன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில், வழக்கின் இறுதி விசாரணை நடத்தி, நீதிபதி மாலதி தீர்ப்பளித்தார்.
செல்வகுமாரை தாக்கி கொலை செய்தாக கைதான ஜோதிமணி, லட்சுமி, பரமேஸ்வரி, குமரேசன், அண்ணாதுரை, மூர்த்தி, பாப்பம்மாள் ஆகிய 7 பேருக்கும் ஆயுள் தண்டனையும். ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி மாலதி உத்தரவிட்டார். மேலும், ஜோதிமணிக்கு மட்டும் கொலை மிரட்டல், தகாத வார்த்தையால் பேசிய இரண்டு வழக்கில் கூடுதலாக 5 ஆண்டு சிறை தண்டனையை, ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி மாலதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜெயந்தி ஆஜரானார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu