பல ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய ஈரோடு கல்யாண ராணி கைது
Erode news- சத்யா.
Erode news, Erode news today- போலீஸ் அதிகாரி உட்பட பல ஆண்களை நகை, பணத்திற்காக திருமணம் செய்து ஏமாற்றிய ஈரோடு கல்யாண ராணி சத்யாவை பாண்டிச்சேரியில் தாராபுரம் போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்தவர் மகேஷ் அரவிந்த். ஆன்லைன் செயலி மூலம் அறிமுகமான ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியை சேர்ந்த சத்யா (வயது 40) என்பவரை திருமணம் செய்தார். இரண்டாவது நாளிலேயே சத்யா ஏற்கனவே திருமணமானவர் என தெரிந்தது. இதுகுறித்து தாராபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகாரளித்தார். இதையடுத்து போலீசார் சத்யாவிடம் விசாரித்தனர்.
அப்போது, சத்யாவுக்கு கரூர் மாவட்டம் தாந்தோன்றி மலையைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி என்பவர் புரோக்கராக செயல்பட்டு இருப்பது தெரியவந்தது. அவரையும் போலீசார் தாராபுரம் வரவழைத்து விசாரித்தனர். பின்னர், இருவரும் போலீசாரின் விசாரணைக்கு எப்போது அழைத்தாலும் வருவதாக கூறி அங்கிருந்து சென்று விட்டனர். அதன் பின்னர் இருவரும் தலைமறைவாகினர்.
அதேசமயம், மகேஷ் அரவிந்த் புகாரில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கையில், மாட்டு வியாபாரி மகன் முதல் போலீஸ் அதிகாரி வரை பலரை சத்யா ஏமாற்றி திருமணம் செய்தது தெரிந்தது. இதையடுத்து அவரை தேடி வந்தனர். செல்போன் சிக்னல் மூலமாக, பாண்டிச்சேரியில் இருப்பதை அறிந்த போலீசார், நேற்று முன்தினம் இரவு அங்கு சென்றனர். சத்யாவை சுற்றி வளைத்து கைது செய்தனர். தாராபுரம் அழைத்து வந்த போலீசார் பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த திருமணத்திற்கு புரோக்கராக செயல்பட்ட தமிழ்ச் செல்வி தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். இவரையும் கைது செய்தால்தான் இன்னும் எத்தனை பேருக்கு சத்யாவை திருமணம் செய்து கொடுத்தார் என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும், கல்யாண ராணி சத்யாவின் கல்யாண லீலை தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu