ஈரோடு அரசு மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் வாபஸ்
ஈரோடு அரசு மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து தொழிலாளர்களின் காத்திருப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர்களின் காத்திருப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது.
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் குவாலிட்டி பிராப்பர்டி மேனேஜ்மென்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் (QPMS) என்ற தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் தூய்மைப் பணி, பாதுகாப்பு உள்ளிட்ட பணிக்கு, 132 பணி செய்கின்றனர். இவர்களுக்கு தினமும், 707 ரூபாய் கூலி வழங்குவதற்கு பதில், 310 ரூபாய் மட்டுமே வழங்குகின்றனர்.
அதைத்தவிர, விருப்பு, வெறுப்பு அடிப்படையில் பணி வழங்குதல், பலருக்கு பணி வழங்காமல் தண்டிப்பது போன்றவற்றில் அந்நிறுவனம் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால், பலமுறை ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடு பட்டனர். அவ்வாறு போராடிய தொழிலாளர்களில், 10க்கும் மேற்பட்டோரை அந்நிறுவனம் வேலை நீக்கம் செய்தது. சிலருக்கு பணி வழங்காமல், சம்பளம் வழங்காமல் புறக்கணித்தது. இதனால் கடந்த, 4 நாட்களாக மருத்துவமனை வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, ஒப்பந்த நிறுவனம் மற்றும் ஏஐடியுசி தொழிற்சங்கம் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சதீஸ்குமார், டி.எஸ்.பி., ஆனந்தகுமார், ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட தலைவர் சின்னசாமி முன்னிலையில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, காத்திருப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது. இதுகுறித்து, ஈரோடு மாவட்ட மருத்துவத் துறை பணியாளர்கள் சங்கம் (ஏஐடியுசி) தலைவர் சின்னசாமி கூறியதாவது: அரசு மருத்துவமனையில் வேலை மறுக்கப்பட்ட 16 ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வேலை அளிக்கவும், விடுபட்ட நாட்களுக்கு சம்பளம் அளிக்கவும் ஒப்பந்த நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.
ஈரோடு மாவட்ட மருத்துவத் துறை பணியாளர்கள் சங்கத்தின், பணியாளர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்தை முன் தேதியிட்டு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் மீது 15 தினங்களுக்குள் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்கள் தரப்பில், எதிர்காலத்தில் முன் அறிவிப்பின்றி இது போன்ற போராட்டங்களில் ஈடுபட மாட்டோம் என்றும், தாங்கள் சார்ந்துள்ள ஏஐடியுசி ஈரோடு மாவட்ட மருத்துவத் துறை பணியாளர்கள் சங்கத்தின் மூலம் கோரிக்கைகளுக்கு தீர்வு காண முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும், என்றும் உறுதியளிக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu