தண்டுவட நரம்பியல் அறுவை சிகிச்சை: ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை சாதனை

தண்டுவட நரம்பியல் அறுவை சிகிச்சை: ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை சாதனை

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை (கோப்பு படம்).

ஈரோடு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 54 வயதுடைய நபருக்கு முதுகெலும்பு தண்டுவட நரம்பியல் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

ஈரோடு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 54 வயதுடைய நபர் ஒருவருக்கு முதுகெலும்பு தண்டுவட நரம்பியல் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காடச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 54). இவருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த வாரம் தீவிர முதுகு வலி மற்றும் நடக்க சிரமம் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து, சிடி ஸ்கேன் மற்றும் இரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் புற்றுநோய் முதுகெலும்புக்கு பரவி நரம்பு தண்டை அழுத்தி உள்ளது என்பது கண்டறியப்பட்டது. தீராத வலியில் பாதிக்கப்பட்டு இருந்தவருக்கு முழு மயக்க மருந்து செலுத்தி நரம்பு தண்டை அழுத்தி கொண்டிருந்த புற்றுநோய் கட்டியை முழுவதுமாக அவசர சிகிச்சை செய்து நீக்கப்பட்டது.

அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவருக்கு முதுகு வலி முற்றிலுமாக குறைந்து உள்ளது. மேலும் அவர் சீராக நடக்கவும் தொடங்கி விட்டார். மேலும், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் 15 நாட்கள் தங்க வைக்கப்பட்டு மருத்துவர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு தக்க சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. தற்போது , அவருக்கு சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வீட்டில் நலமாக உள்ளார்.

இந்த அறுவை சிகிச்சையானது தனியார் மருத்துவமனையில் மேற்கொண்டிருந்தால் ரூ.2.5 லட்சம் தோராயமாக செலவாகும். ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.30 ஆயிரத்து 500 ஒதுக்கீடு செய்யப்பட்டு முழுமையாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் மூலம், முதுகெலும்பு தண்டுவட நரம்பியல் அறுவை சிகிச்சை மேற்கொண்டு தற்போது, நலமாக உள்ளமைக்கு, தமிழ்நாடு முதலமைச்சருக்கு செல்வராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story