ஈரோடு பர்னிச்சர் கடையில் பயங்கர தீவிபத்து: பொருட்கள் எரிந்து சேதம்

ஈரோடு பர்னிச்சர் கடையில் பயங்கர தீவிபத்து: பொருட்கள் எரிந்து சேதம்
X

பைல் படம்.

ஈரோட்டில் பர்னிச்சர் கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான வீட்டு உப யோக பொருட்கள் எரிந்து நாசமானது.

ஈரோடு குமலன்குட்டை சரோஜினி நகர் பகுதியை சேர்ந்தவர் மாது (70). இவரும், இவருடைய மகன் செந்தில்குமாரும், ஈரோடு நசியனூர் ரோடு நாராயணவலசு பகுதியில் பர்னிச்சர் கடை நடத்தி வருகின்றனர். இவர்களுடைய கடையில் 5 பேர் வேலை செய்து வருகின்றனர். கடை தினமும் காலை 8.30 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 9.15 மணிக்கு பூட்டி செல்வது வழக்கம்.

அதன்படி இரவு வியாபாரத்தை முடித்துக் கொண்டு இரவு 9.15 மணிக்கு மாது கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 9.40 மணி அளவில் கடையில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. தொடர்ந்து பர்னிச்சர் கடை தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது. இதுபற்றி ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

அதன் பேரில் தீயணைப்பு படை வீரர்கள் மூன்று தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 30 நிமிடங்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.எனினும் கடைக்குள் இருந்து கரும்புகை வந்து கொண்டிருந்ததால் தீயணைப்பு படை வீரர்கள் கடைக்குள் இருந்த அனைத்து பொருட்களையும் வெளியில் கொண்டு வந்து, தீ முழுமையாக அணைந்ததை உறுதி செய்தபின்னர் அங்கிருந்து சென்றனர்.பர்னிச்சர் கடையின் எதிரே பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து செயல் பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

எனினும் பர்னிச்சர் கடையில் இருந்த கட்டில், பீரோ, மெத்தைகள், பெயிண்டுகள் என பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து நாசமானது. முதல் கட்ட விசாரணையில், மின் கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!