ஈரோட்டில் இலவச கண் பரிசோதனை முகாம்..
இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
ஈரோட்டில் உள்ள மனாருள் ஹுதா மஸ்ஜித் மதரஸா என்ற அமைப்பு அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை ஜாதி மத வேறுபாடு இன்றி செய்து வருகின்றது. அந்த வகையில் மனாருள் பூதா மஸ்ஜித் அண்ட் மதரசா தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை மற்றும் ஈரோடு எக்கனாமிக் சேம்பர் ஆகியவை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் மதரசா வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு முத்தவல்லி ஹாஜி சிக்கந்தர் மற்றும் தலைவர் அபுஹீரைரா ஆகியோர் தலைமை வகித்தனர். ஈரோடு காவல் துணை கண்காணிப்பாளர் ஆனந்தகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்தார். அவர் பேசும்போது, "ஜாதி மத வேறுபாடுகளை கடந்து இந்த பகுதியில் உள்ள அனைத்து மக்களுக்கும் மனாருள் ஹுதா மஸ்ஜித் மதரஸா என்ற அமைப்பு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருவதாகவும்" பாராட்டினார்.
மேலும், "மதரஸா வளாகத்தில் பிற மக்களை சிலர் அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் இங்குள்ள இஸ்லாமிய நண்பர்கள் அனைத்து மக்களையும் அரவணைத்து அவர்களுக்கு தேவையான பல்வேறு உதவிகளை செய்து வருவது என்பது மிகுந்த பாராட்டுக்குரியது" என்று நெகிழ்ச்சியுடன் அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், ஈரோடு சூரம்பட்டி காவல் ஆய்வாளர் கோமதி, மற்றும் மனாருள் ஹுதா மஸ்ஜித் மதரஸா துணை தலைவர் அக்பர் அலி, செயலாளர் முகமது ஹனீபா, பொருளாளர் உமர் பாரூக், ஈரோடு மாவட்ட சிறுபான்மை மக்கள் நலக்குழு தலைவர் இஸாரத் அலி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முகாமின்போது, கண்புரை, தூரப் பார்வை, கிட்டப் பார்வை, கருவிழி நோய், கண்சதை, சர்க்கரை கண் விழித்திரை நோய், கண் பிரசர் ஆகிய நோய்களுக்கு தகுந்த பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், முகாமில் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு மருத்துவ ஆலோசனை மற்றும் கண் பரிசோதனை செய்யப்பட்டது.
இதுதவிர, பிறவி கண்புரை, பிறவி கண்நீர் அழுத்த நோய், மாறுகண், மாலைக்கண் போன்ற பிரச்சினை உள்ள குழந்தைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து உள்ளவர்களுக்கு கண் மருத்துவர் பரிந்துரையின் அடிப்படையில் கண்ணாடிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கண்விழித்திரை பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து முகாமில் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கண்நீர் அழுத்த நோய் பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த கண் சிகிச்சை முகாமில் சுமார் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu