ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோயில் வைகாசி விசாக தேர்த் திருவிழா
ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவிலில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
ஈரோடு கோட்டை வருணாம்பிகை உடனமர் ஆருத்ர கபாலீஸ்வரர் வகையறா திருக்கோவில் வைகாசி விசாக தேர்த் திருவிழா கணபதி ஹோமத்துடன் கடந்த 23-ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து மேல் வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரஹனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து வரும் ஜுன் மாதம் 3-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. இந்த வைகாசி தேர்த்திரு விழாவில் முதல் நாள் நிகழ்ச்சியாக கடந்த 24-ம் தேதி அதிகாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை விருஷபயாகம், த்வஜ பட பூஜை, தேவ ரக்ஷாபந்தனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதையடுத்து மாலை 6.30 மணிக்கு மேல் யாக சாலை பூஜை தொடக்கம், நவ சந்தி, இந்திர விமா னத்தில் சோமாஸ்கந்தர் சோடச உபசார பூஜையுடன் ரதவீதி பிரதட்சனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. வைகாசி விசாகத்தின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. சரஸ்வதி எம்.எல்.ஏ., துணை மேயர் வெல்வராஜ், இந்து அறநிலையத்துறை அறங்காவல் குழு தலைவர் எல்லப்பாளையம் சிவக்குமார், செயல் அலுவலர் கயல்விழி, கவுன்சிலர் பழனியப்பா செந்தில்குமார் உள்பட பலர் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு பகுதி, பன்னீர் செல்வம் பார்க், மீனாட்சி சுந்தரனார் சாலை, காமராஜர் வீதி வழியாக மீண்டும் தேர் இன்று மாலை கோவிலில் நிலை நிறுத்தப்பட்டது. தேரோட்டத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 3-ம் தேதி வரை திருவிழா நடைபெறுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu