ரயில் நிலையங்களில் குவிந்த வட மாநிலத்தவர்கள்..!

ரயில் நிலையங்களில் குவிந்த வட மாநிலத்தவர்கள்..!
X

ஈரோடு ரயில் நிலைய வளாகத்தில், காலை வரை குடும்பத்தோடு காத்திருந்த வட மாநில தொழிலாளர்கள். 

ஈரோட்டில் வேலை பார்க்கும் வடமாநில தொழிலாளர்கள், மீண்டும் சொந்த மாநிலத்துக்கு திரும்பி செல்ல தொடங்கியுள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான வட மாநிலத்தவர்கள் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக கட்டிட வேலை, சாய, தோல் தொழிற்சாலை, சிப்காட் பகுதியில் செயல்படும் தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள், பனியன் கம்பெனிகள், மில்கள், பானிபூரி வியாபாரம், டீக்கடை என பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர். ஈரோடு மாநகர் பகுதி, சென்னிமலை ,பெருந்துறை போன்ற இடங்களில் அதிக அளவு வடமாநிலத்தவர்கள் குடும்பங்களுடன் தங்கியிருந்து பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வருடம் கொரோனா தாக்கம் காரணமாக ஏராளமான வடமாநிலத்தவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு பிறகு சொந்த மாநிலங்களுக்கு திரும்பிச் சென்றனர். பின்னர் தாக்கம் குறையத் தொடங்கியதும் மீண்டும் ஈரோடுக்கு வந்து வேலை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் மீண்டும் கொரோனா தாக்கம் வேகமெடுத்து உள்ளதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதையொட்டி கடந்த சில நாட்களாக ஈரோட்டில் தங்கி வேலை பார்க்கும் வடமாநில தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் சொந்த மாநிலத்துக்கு திரும்பி செல்ல தொடங்கியுள்ளனர்.இதனால் கடந்த சில நாட்களாக ஈரோடு ரயில் நிலையத்தில் வட மாநிலத்தவர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. எனினும் இன்று சிறப்பு ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி ஈரோடு ரயில் நிலையத்திற்கு நேற்றிரவு முதலே வடமாநிலத்தவர்கள் வந்து குவிய தொடங்கினர். இன்று காலையும் சிலர் கால்நடையாக நடந்து வந்து ரயில் நிலையத்திற்கு வந்தனர். இரவு வந்த வட மாநிலத்தவர்கள் தஙகளது குடும்பத்தினருடன் ரயில் நிலைய வளாகத்திலேயே காலை வரை தங்கினர். அதைத் தொடர்ந்து இன்று காலை இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களில் தங்களது சொந்த ஊருக்கு கிளம்பி சென்றனர்.

Tags

Next Story