புதிய கட்டுப்பாடுகள் அமல் : காய்கறி, மளிகை கடைகளில் அலைமோதிய கூட்டம்
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் தொடர்ச்சியாக விதிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 20ஆம் தேதி முதல் இரவு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கின் போது தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எனினும் நாளுக்கு நாள் தொற்று பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து மேலும் புதிய கட்டுப்பாடுகைளை தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி இன்று முதல் வரும் 20ஆம் தேதி வரை இந்த புதிய கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் புதிய கட்டுப்பாடு அமலுக்கு வந்தது. காய்கறி, மளிகை, டீ, இறைச்சி கடைகள், மீன் கடைகள் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே இயங்கியது. மற்ற அனைத்து விதமான கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது.
ஈரோடு வ.உ.சி பூங்கா பகுதியில் செயல்பட்டு வரும் நேதாஜி பெரிய மார்க்கெட்டில் காலை முதலே மக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. வேலைக்கு செல்லும் பணியாளர்கள் காலை 6 மணிக்கு பெரிய மார்க்கெட்டுக்கு வந்து தேவையான காய்கறிகளை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு சென்றனர். இதேபோல் உழவர் சந்தையிலும் மக்கள் கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது.
இதேபோல் மளிகை கடைகளிலும் காலை நேரத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மாவட்டம் முழுவதும் உள்ள ஜவுளி கடைகள், பாத்திரக் கடைகள், எலக்ட்ரானிக் கடைகள், செல்போன் ரீசார்ஜ் கடைகள் உட்பட அனைத்து வகையான கடைகள் மூடப்பட்டு இருந்தது. பஸ் போக்குவரத்தை பொறுத்தவரை தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து 50 சதவீத பயணிகளுடன் மட்டுமே பஸ் இயக்கப்பட்டது. பெரும்பாலான பஸ்களில் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. தனியார் பஸ்களும் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டன.
இதுபோல் டாக்ஸி,ஆட்டோ பயணத்தை மக்கள் தவிர்த்தனர். உணவகங்கள் வழக்கம் போல் செயல்பட்டது. ஆனால் பார்சலில் மட்டுமே உணவு வழங்கப்பட்டது. இதனால் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், பகல் 12 மணி முதல் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சலில் உணவு வழங்கப்பட்டது.
இதேபோல் அம்மா உணவகங்கள் வழக்கம் போல் செயல்பட்டது. ஆனால் பார்சல் மட்டுமே மேலே குறிப்பிட்ட நேரப்படி உணவு வழங்கப்பட்டது. ஏற்கனவே மாநகராட்சி நகராட்சி பகுதிகளில் அழகு நிலையங்கள், சலூன் கடைகள் செயல்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று முதல் ஊரகப் பகுதிகளிலும் செயல்பட அழகு நிலையங்கள் சலூன் கடைகள் செயல்படவில்லை. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 37 தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்களுடன் பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பெட்ரோல் பங்குகள் வழக்கம் போல் செயல்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu