கொரோனா அச்சம்: கருங்கல்பாளையம் மாட்டு சந்தையில் விற்பனை மந்தம்

கொரோனா அச்சம்: கருங்கல்பாளையம் மாட்டு சந்தையில் விற்பனை மந்தம்
X
ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டு சந்தையில், வெளிமாநில வியாபாரிகள் வருகையின்றி, விற்பனை மந்தமாக இருந்தது.

ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தை, வாரந்தோறும் வியாழக்கிழமை நடைபெறுவது வழக்கம். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக செயல்படாமல் இருந்து வந்த மாட்டுச்சந்தை, கடந்த வாரம் மீண்டும் செயல்படத் தொடங்கியது. கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

அதன்படி, சந்தைக்கு வரும் வியாபாரிகள், விவசாயிகள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி போட்ட சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். முகக்கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. கடந்த வாரம் கூடிய சந்தையில் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற வெளிமாநில வியாபாரிகள் யாரும் வராததால் விற்பனை மந்தமாக நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து, இன்று இரண்டாவது வாரமாக கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தை கூடியது. இன்று நடந்த சந்தையில் பசுமாடு 200, எருமை 50, கன்றுக்குட்டிகள் 50 விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. வழக்கமாக ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் இருந்து வியாபாரிகள் அதிக அளவில் வருவார்கள். இதேபோல தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கி செல்வார்கள்.

ஆனால், கொரோனா அச்சம் காரணமாக வியாபாரிகள் எண்ணிக்கை மிகவும் குறைந்த அளவிலேயே இருந்ததால், எப்போதும் நடைபெறும் விற்பனையில் பாதிஅளவு தான் நடைபெற்றது. குறிப்பாக கேரளா, கர்நாடகா மகாராஷ்டிரா போன்ற வெளிமாநில வியாபாரிகள் வராததால், சந்தை வெறிச்சோடியது. தமிழகத்தில் இருந்து பல்வேறு பகுதிகளில் குறைந்த அளவே உள்ளூர் வியாபாரிகள் வந்திருந்தனர். மாடுகள் ரூ.15,000 முதல் 30 ஆயிரத்துக்கு விற்பனையாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story