ஈரோட்டில் கொரோனாவால் செய்தியாளர் மரணம் : உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை
ஈரோட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்த பத்திரிகையாளர் குடும்பத்திற்கு தமிழக அரசின் நிவாரண நிதி மற்றும் உதவியை பெற்றுத் தருமாறு அமைச்சர் முத்துசாமியிடம் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது-
ஈரோடு ரங்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் தனியார் தொலைக்காட்சியில் மாவட்ட செய்தியாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
எனினும் சிகிச்சை பலனின்றி கடந்த 15ம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து மறைந்த செய்தியாளர் ராஜேந்திரனுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இன்று ஈரோடு மாவட்ட பத்திரிக்கையாளர்கள் நலச்சங்கம் சார்பில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
ஈரோடு பெரியார் மன்றத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு செய்தியாளர் ராஜேந்திரனின் திருவுருவ படத்தை திறந்து வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு பத்திரிக்கையாளர்கள் இறந்தால் ரூ.10லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பின் படி உயிரிழந்த ராஜேந்திரன் குடும்பதாருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அமைச்சர் முத்துசாமியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இந்த இரங்கல் கூட்டத்தில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி, அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் கே.வி.ராமலிங்கம்,தென்னரசு, திமுக துணைப்பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் உட்பட பல்வேறு அரசியல் கட்சி மற்றும் அமைப்புகளை சார்ந்த பிரமுகர்கள் உட்பட பத்திரிக்கையாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu