ஈரோடு ரயில் நிலையங்களில் கொரோனா பரிசோதனை தீவிரம்
ஈரோடு ரயில் நிலையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
தமிழகத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக தற்போது கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. இந்நிலையில் கேரள மாநிலத்தில் கொரோனா தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக ஓணம் பண்டிகைக்கு பிறகு அங்கு தினசரி பாதிப்பு 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை பதிவாகி வருகிறது. இதையடுத்து மாநில சுகாதாரத் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஈரோடு வழியாக கேரளாவுக்கு தினமும் 60-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் கேரளாவில் இருந்து ஈரோடுக்கு வருகின்றனர். அவர்களுக்கு சுகாதார துறையினர் சார்பில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு உடல் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதில் கேரளா ரயிலில் இருந்து வரும் பயணிகள் விவரங்களை சுகாதாரத்துறையினர் முதலில் சேகரிக்கின்றனர். அவர்கள் பெயர், செல்போன் நம்பர், எங்கு செல்கிறீர்கள், எங்கு வேலை பார்க்கிறீர்கள் போன்ற விவரங்களை சேகரிக்கின்றனர். பின்னர் அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் மட்டும் அரசு மருத்துவமனைக்கு கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் அவர்கள் எந்த பகுதியில் உள்ளார்களோ அந்தப் பகுதி சுகாதாரத்துறையினருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கின்றனர். பரிசோதனை முடிவில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu