கணவருக்கு 2ம் திருமணம் செய்து வைக்க முயற்சி: எஸ்.பி. அலுவலகத்தில் பெண் புகார்

கொலை மிரட்டல் விடுத்து கணவருக்கு 2-ம் திருமணம் செய்து வைக்க முயற்சி நடப்பதாக, ஈரோடு எஸ்.பி .அலுவலகத்தில் இளம்பெண் புகார் அளித்துள்ளார்.

ஈரோடு பெரிய சேமூர் அடுத்த எல்லப்பாளையம் சக்தி நகரை சேர்ந்த 28 பெண் ஒருவர், இன்று ஈரோடு எஸ் பி அலுவலகத்திற்கு வந்து பரபரப்பான புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பாக, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்த சிஎன் பாளையம், ராஜாராஜன் நகர் பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். எங்கள் திருமண வாழ்க்கை நன்றாக போய்க் கொண்டிருந்தது.

இந்நிலையில், கடந்த 5ஆம் தேதி எனது கணவர் பெற்றோர்களைப் பார்த்து வருவதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் நான் எனது கணவர் வீட்டிற்கு சென்று எனது கணவரை என்னுடன் வருமாறு அழைத்தேன்.அதற்கு என் கணவர் வர மறுத்துவிட்டார்.

அப்போது, எனது மாமனாரிடம் நாங்கள் திருமணம் செய்து ஒன்றரை வருடமாக வாழ்ந்து வருவதாக கூறினேன். அதற்கு எனது மாமனார் என்னை தகாத வார்த்தைகளால் பேசி, என் மகன் உன்னுடன் வாழ மாட்டான். நாங்கள் அவனுக்கு வேறு திருமணம் செய்து வைக்கப் போகிறோம் என்று கூறினார்.

அதற்கு நான், முடியாது வாழ்ந்தால் உங்கள் மகனுடன் தான் வாழ்வேன் என்று கூறினேன். அப்போது எனது மாமியார், 'உன்னை மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்து விடுவேன்' என்று மிரட்டினார். தகாத வார்த்தையால் என்னைத் திட்டினார். நான், இதுகுறித்து போலீசில் புகார் கொடுக்கப் போகிறேன் என்று சொல்லி வந்து விட்டேன்.

எனக்கென்று ஆதரவு யாரும் இல்லை. இந்நிலையில் எனது கணவரது விட்டார்கள் கொமாரபாளையம் காவல் நிலையத்தில் என் மீது பொய்ப்பழி சுமத்தி புகார் கொடுத்தார்கள். அது சம்மந்தமாக போலீசார் விசாரித்து கையெழுத்து வாங்கிக் கொண்டனர். இப்போது நான் ஆதரவற்ற நிலையில் இருக்கிறேன்.

எனது கணவர் தினேஷ் நான் உன்னுடன் கடைசி வரை இருப்பேன் என்று கூறி என்னை திருமணம் செய்து கொண்டார்.ஆனால் இப்போது என்னுடன் ஒன்றரை வருடமாக குடும்பம் நடத்தி விட்டு எனது மாமனார் மாமியார் பேச்சைக் கேட்டு என் மீது வீண்பழி சுமத்தி வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சி செய்து வருகிறார்.

மேலும் எனக்கு கொலை மிரட்டலும் கொடுக்கின்றனர்.எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. ஆகவே தாங்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு எனது கணவர் மற்றும் மாமனார் மாமியாரை விசாரித்து என் கணவருக்கு புத்திமதி சொல்லி என்னுடன் வாழ வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு, அந்த மனுவில் கூறியுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!