பெரிய மாரியம்மன் கோவிலில் குண்டம் விழா
ஈரோடு மாநகர் பகுதியில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் மற்றும் அதன் வகையறா கோயில்களாக சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் கோவில்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் இந்த கோவிலில் குண்டம் தேர்த்திருவிழா மிகவும் விமர்சையாக நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக கோவில் திருவிழா நடைபெறவில்லை. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதைப் போன்று இந்த ஆண்டும் கோவில் திருவிழா நடைபெறுமா? என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் எளிமையான முறையில் குண்டம் மற்றும் தேர் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நேற்று முன்தினம் இரவு பூச்சாட்டுதலுடன் குண்டம் தேர் திருவிழா தொடங்கியது.
அதைத்தொடர்ந்து நேற்று 3 கோவில்களிலும் கம்பம் நடப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி இன்று நடந்தது.
இதற்காக காரைவாய்க்கால் சின்ன மாரியம்மன் கோவில் வளாகத்தில் நேற்று இரவு தீ பற்ற வைத்த நிகழ்ச்சி நடந்தது. அதைத் தொடர்ந்து இன்று இந்த நிகழ்ச்சி தொடங்கியது. வழக்கமாக குண்டம் இறங்கும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் தீ மிதித்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள். ஆனால் இந்த வருடம் கொரோனா தாக்கம் காரணமாக பூசாரிகள் மட்டுமே இறங்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி மூன்று வகையறா கோவில்களை சேர்ந்த 9 பூசாரிகள் குண்டம் இறங்கினர். இதை தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு தேரோட்டம் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக சின்ன மாரியம்மன் கோவில் வளாகம் முன்பு தேர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. காலை 10 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. கொரோனா தாக்கம் காரணமாக கடும் கட்டுப்பாடுகளுடன் தேரோட்டம் நடந்தது. பொன்வீதி, டவுன் போலீஸ் நிலையம், மணிக்கூண்டு அக்ரகார வீதி, கச்சேரி வீதி வழியாக திரும்பவும் சின்ன மாரியம்மன் கோவிலில் தேர் நிலை நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணிக்கு மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சியும். இதை தொடர்ந்து வரும் 12ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு மஞ்சள் நீராட்டுடன் கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 13-ஆம் தேதி மறுபூஜை உடன் திருவிழா நிறைவடைகிறது. கொரோனா தாக்கம் காரணமாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி சின்ன மாரியம்மன் கோவிலில் வழிபட வரும் பக்தர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பின்னரே பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப் பட்டனர். மேலும் சனிடைசர் மூலம் கை சுத்தப் படுத்தப் பட்டது. 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள்,65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் கோவிலுக்கு வர வேண்டாம் என நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu