ஈரோட்டில் மீண்டும் தொடங்கியது தடுப்பூசி பணி: இரவிலேயே காத்திருந்து மக்கள் ஆர்வம்
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. தடுப்பூசிகள் கையிருப்பு இல்லாததால் கடந்த 15ம் தேதி மாவட்டம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. நேற்று அதிகாலை, ஈரோடு மாவட்டத்திற்கு 15 ஆயிரத்து 600 கோவிஷில்டு, 4 ஆயிரம் கோவேக்சின் என மொத்தம் 19 ஆயிரத்து 600 தடுப்பூசிகள் வந்தன.
இதனை தொடர்ந்து புறநகர் பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் நேற்று மட்டும் தடுப்பூசி போடும் பணி நடந்தது. மாநகர் பகுதியில் உள்ள 10 ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடவில்லை. இந்நிலையில் இன்று ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள 10 மையங்களில் தடுப்பூசி போடப்பட வேண்டும் என மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து நேற்றிரவு முதலே ஒரு சில மையங்களில் தடுப்பூசி போட மக்கள் குவியத் தொடங்கினர். ஈரோடு சாஸ்திரி நகர் பகுதியில் உள்ள தடுப்பூசி மையத்தில், நேற்று இரவு 9 மணிக்கு ஒரு சில மக்கள் தடுப்பூசி போடுவதற்காக வந்திருந்தனர். அவர்கள் தங்கள் கையில் பிஸ்கெட் தண்ணீர் வைத்திருந்தனர். இன்னும் சில மையங்களில் நள்ளிரவு ஒரு மணி முதலே மக்கள் குவியத் தொடங்கினர். இதையடுத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இன்று காலை 8மணி முதல் 10 மையங்களிலும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. ஒவ்வொரு மையங்களிலும் 200 கோவிஷில்டு, 100 கோவேக்சின் என்று பிரித்து 10 மையங்களில் இன்று 3000 தடுப்பூசிகள் போடப்பட்டன. முதலில் வந்த 300 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டு அவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. மீதம் உள்ளவர்களை போலீசார் திருப்பி அனுப்பிவிட்டனர்.
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தடுப்பூசி போடும் பணியை வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் உள்பட பல்வேறு அதிகாரிகள் உடனிருந்தனர். இன்று புறநகர் பகுதியில் உள்ள மையங்களில் தடுப்பூசி போடப்படவில்லை.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu