ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு
வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், வாக்குச்சாவடி மையங்களில் கதவுகள் அடைக்கப்பட்டன.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், வாக்குச்சாவடிகளில் வரிசையில் நிற்பவர்களுக்கு வாக்களிக்க டோக்கன் அளிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று (பிப்.27) காலை 7 மணிக்கு தொடங்கியது. திமுக கூட்டணி கட்சி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் உட்பட மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்
காலை முதலே வாக்குப்பதிவு மந்தமாகவே இருந்தது. நேரம் செல்லச்செல்ல விறுவிறுப்படைந்தது. காலை 9 மணி நிலவரப்படி 10.10 சதவீதமும், காலை 11 மணி நிலவரப்படி 27.89 சதவீதமாகவும் இருந்தது. பகல் 1 மணி நிலவரப்படி 44.56 சதவீதமும், மாலை 3 மாலை நிலவரப்படி 56.28 சதவீதமும், மாலை 5 மணி நிலவரப்படி 70.58 சதவீதம் வாக்குகளும் பதிவாகியிருந்தன.கடந்த 10 மணி நேரத்தில் மட்டும் 1,60,603 வாக்காளர்கள் வாக்களித்திருந்தனர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. பின்னர், மாலை 6 மணி வரை வந்தவர்களுக்கு டோக்கன் விநியோகிக்கப்பட்டு வரிசையில் நின்று வாக்களிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் 66.56 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில் இம்முறை கூடுதல் வாக்குகள் பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
வாக்குப்பதிவு நிறைவடைந்த மையங்களில் வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கும் பணியானது துவங்கியது. மார்ச் மாதம் 2-ம் தேதி (வியாழக்கிழமை) வேட்பாளர்கள் முகவர் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரம் அறையின் சீல் அகற்றப்பட்டு வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெறும். அன்று மதியம் முடிவுகள் தெரிந்து விடும். 77 பேர் போட்டியிடும் நிலையில், 2 அறைகளில் 16 மேஜைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu