ஈரோடு கிழக்கு தொகுதியில் இதுவரை ரூ. 14.47 லட்சம் பறிமுதல்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த திருமகனின் தந்தையும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நாள் முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதையடுத்து ரூ. 50 ஆயிரத்திற்க்கு மேல் ரொக்க பணம், ரூ.10 ஆயிரத்திற்கு மேல் பரிசுப்பொருட்கள் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டால் பறிமுதல் செய்யப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த மாதம் 20 ஆம் தேதி முதல் 4 நிலை கண்காணிப்பு குழுவினர், 3 பறக்கும் படையினர் சுழற்சி முறையில் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுடன் இணைந்து போலீஸாரும் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த மாதம் 20 ஆம் தேதி முதல் இன்று வரை, உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ரூ.14 லட்சத்து 11 ஆயிரத்து 840 பறிமுதல் செய்யப்பட்டு, மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. மேலும் ரூ.30 ஆயிரத்து 610 மதிப்பிலான 43 லிட்டர் மதுபானம், ரூ. 4 ஆயிரத்து 800 மதிப்பிலான 300 கிராம் கஞ்சா, ரூ.163 மதிப்பிலான புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இதுவரை, பணம் மற்றும் பிற பொருட்கள் என ரூ.14 லட்சத்து 47 ஆயிரத்து 413 மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu