ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியீடு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியீடு
X

இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு (பைல் படம்).

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டு அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் பட்டியல் இன்று மாலை வெளியாகிறது.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் 83 மனுக்கள் ஏற்கப்பட்டன. இதையடுத்து இன்று வெள்ளிக்கிழமை (பிப்.10) வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளாகும். இதில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி ஆகியோர் கட்சி சின்னத்திலும் மற்றவர்கள் சுயேட்சையாக போட்டியிடுகின்றனர். இதில் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டு விட்டன. இந்த இடைத்தேர்தலில் ஏராளமான சுயேட்சைகள் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், சுயேட்சைகளுக்காக தேர்தல் ஆணையம் 191 சின்னங்களை வெளியிட்டுள்ளது.

வேட்பு மனுக்கள் இன்று வாபஸ் பெறப்பட்டு மாலை 3 மணிக்கு மேல் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அப்பட்டியலில் வேட்பாளர் பெயர், அவர் சார்ந்த கட்சி பெயர் அல்லது சுயேட்சை என்ற விபரமும், அவருக்கான சின்னமும் வழங்கப்படும். ஒரே சின்னத்தை சில வேட்பாளர்கள் கோரினால் அவர்களுக்கு குலுக்கல் முறையில் தேர்வு செய்து வழங்கப்படும்.

இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலரும், ஈரோடு மாநகராட்சி ஆணையாளருமான க.சிவகுமார் கூறியதாவது, இடைத்தேர்தலுக்காக 121 வேட்புமனுக்கள் பெறப்பட்டு இருந்தன. இதில் 80 மனுக்கள் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டன. 3 மனுக்களில் தேர்தல் பதிவு அதிகாரியின் கடிதம் நகல் வைக்கப்பட்டு இருந்தது. எனவே அந்த மனுக்கள் பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. பின்னர் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று, அந்த மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இதன் மூலம் 83 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 38 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

தேர்தலில் போட்டியிட விரும்பாதவர்கள் இன்று (10-ம் தேதி) மாலை 3 மணி வரை தங்கள் வேட்புமனுக்களை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். வேட்புமனு திரும்ப பெறுவதற்காக காலக்கெடு முடிந்ததும், சுயேச்சை வேட்பாளர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் கூறினார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!