ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வீடு வீடாக சென்று பூத் சிலிப் விநியோகம்
ஈரோடு கிழக்குத் தொகுதியில் பூத் சிலிப் வழங்கும் பணி தொடங்கியது.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாட்களே உள்ளதால் பிரசாரம் அனல் பறக்கிறது. இந்த ஈரோடு கிழக்குத் தொகுதியில் தற்போதைய நிலவரப்படி இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட துணை வாக்காளர் பட்டியலில், 1 லட்சத்து 11 ஆயிரத்து 25 ஆண் வாக்காளர்கள்; 1 லட்சத்து 16 ஆயிரத்து 497 பெண் வாக்காளர்கள்; 25 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்கள் இடம்பெற்று உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி இன்று தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி இன்று முதல் தொடங்கியது.
இதற்காக 238 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வீடு, வீடாக சென்று வாக்காளர்களை சரி பார்த்து பூத் சிலிப் வழங்கி வருகின்றனர். வாக்காளர்கள் தகவல் சீட்டில் வாக்காளர்களின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. இதில் வாக்காளர் பெயர், அடையாள அட்டை எண், பாகத்தின் பெயர், பாகம் எண் வரிசையில் வாக்குச்சாவடியின் பெயர், தேர்தல் நாள் மற்றும் வாக்குப்பதிவு நேரம் ஆகியவை இடம் பெற்றுள்ளது. இந்த பூத் சிலிப்பை மட்டும் வைத்து வாக்காளர்கள் வாக்குச்சாவடியில் வாக்களிக்க இயலாது. இந்திய தேர்தல் ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட 11 ஆவணங்களில் ஏதேனும் ஒரு ஆவணத்தை கொண்டு வந்து வாக்களிக்கலாம் என வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதுகுறித்து ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் க.சிவகுமார் கூறியதாவது, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட வாக்காளர்களுக்கு இன்று முதல் வருகின்ற 24-ம் தேதி வரை பூத் சிலிப் வழங்கப்படவுள்ளது. இதற்காக ஒரு வாக்குச்சாவடிக்கு ஒருவர் எனும் கணக்கில் மொத்தம் 238 வாக்குச்சாவடிகளுக்கும் 238 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.அவர்களிடம் பூத் சிலிப் படிவங்கள் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டு விட்டன. அலுவலர்கள் இன்று காலை 8 மணி முதல் வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று வாக்காளர் விவரங்களை சரிபார்த்து பூத் சிலிப் வழங்குகின்றனர். பூத் சிலிப் பெற முடியாத அல்லது கிடைக்கப்பெறாத வாக்காளர்களுக்கு வாக்குப் பதிவு நாளன்று அந்தந்த வாக்கு சாவடிகளிலேயே பூத் சிலிப் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu