ஈரோடு மாவட்ட க்ரைம் செய்திகள்…
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் சமீபத்தில் நிகழ்ந்த சில க்ரைம் செய்திகள் குறித்த விவரங்களை தெரிந்து கொள்வோம்.
ஓட்டலில் மது விற்ற நபர் கைது:
ஈரோடு மாவட்டம், அந்தியூர் பேருந்து நிலையம் அருகே பவானி சாலையில் உள்ள ஓட்டலில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், அந்தியூர் காவல் ஆய்வாளர் மோகன்ராஜ் மற்றும் உதவி ஆய்வாளர் கார்த்திக் ஆகியோர் இன்று காலை ஓட்டலில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு மது வைத்து விற்றதாக ஓட்டல் தொழிலாளி மதுரை மாவட்டம் திருப்புவனம் பகுதியை சேர்ந்த முத்துக்குமரன் (வயது 46) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 109 மதுபாட்டில்கள் மற்றும் ரூ. 1,500 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக தப்பித்து ஓடிய இந்திரா என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
தூக்கிட்டு தற்கொலை:
ஈரோடு, சக்தி நகரை சேர்ந்தவர் அதிசயராஜ் (வயது 41). இவரது மனைவி மோகனா (28). இவர்கள் மளிகை கடை வைத்து நடத்தி வந்தனர். கடந்த சில மாதங்களாக குடிபோதைக்கு அடிமையான அதிசயராஜ் சரிவர வியாபாரத்தை கவனிக்காமல், குடிபோதையிலேயே இருந்து வந்துள்ளார்.
இந்தநிலையில், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அதிசயராஜ் தூக்கு மாட்டிக்கொண்டார். இதைப் பார்த்த மனைவி மோகனா அக்கம் பக்கத்தினர் உதவியோடு மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாக கூறினர். இது குறித்து ஈரோடு வடக்கு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மூதாட்டி உயிரிழப்பு:
ஈரோடு, வில்லரசம்பட்டி, உதயம் கார்டன் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி மனைவி விஜயலட்சுமி (63). இவர் கடந்த 6 ஆம் தேதி கார்த்திகை தீபத்தை யொட்டி, வீட்டில் விளக்கு ஏற்றிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக விஜயலட்சுமி அணிந்திருந்த நைட்டியில் தீ பற்றிக்கொண்டது.
இதில் உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிசிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி விஜயலட்சுமி இறந்தார். இது குறித்து ஈரோடு வடக்கு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu