ஈரோடு மாவட்ட க்ரைம் செய்திகள் சில வரிகளில்..

ஈரோடு மாவட்ட க்ரைம் செய்திகள் (பைல் படம்).
ஈரோடு மாவட்டத்தில் நடந்த குற்றச் செய்திகளின் தொகுப்பை இங்கு க்ரைம் செய்திகளாக காண்போம்.
அங்கன்வாடி பெண் பணியாளர் தற்கொலை முயற்சி:
சென்னிமலை பகுதியை சேர்ந்தவர் நதியா (38). இவர் சென்னிமலை அருகே தண்ணீர்பந்தலில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், சென்னிமலை வட்டார குழந்தைகள் திட்ட அலுவலர், கூடுதலாக கவுண்டச்சிபாளையம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தையும் கவனிக்குமாறு நதியாவிடம் சொன்னதாக கூறப்படுகிறது. இதற்கு நதியா, 15 கி.மீ. தூரத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தையும் கூடுதலாக கவனிப்பதில் சிரமம் இருப்பதாக கூறி உள்ளார். இதை ஏற்க மறுத்த ஆனந்தி, நதியாவை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால், நதியா திடீரென மனமுடைந்து எலி மருந்து (விஷம்) சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதுகுறித்து சென்னிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.
வாய்க்காலில் முதியவர் சடலம் மீட்பு:
கொடுமுடி அருகே உள்ள மலைக்காட்டுத்தோட்டம் கீழ்பவானி வாய்க்காலில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக கொடுமுடி இச்சிபாளையம் கிராம நிர்வாக அலுவலர் யுவராணிக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதுகுறித்து, கிராம நிர்வாக அலுவலர் யுவராணி அளித்த புகாரின்பேரில் கொடுமுடி போலீசார் சடலத்தை மீட்டு விசாரிக்கின்றனர்.
பாம்பு கடித்து விவசாயி உயிரிழப்பு:
சத்தியமங்கலம் அடுத்த மாமரத்துத்தோட்டம் அய்யன் சாலை பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (53). விவசாயி. இவர் தனக்கு சொந்தமான தோட்டத்துக்கு கடந்த 4ம் தேதி தண்ணீர் பாய்ச்ச சென்ற போது, பாம்பு ஒன்று கனகராஜை காலில் கடித்து விட்டது. இந்நிலையில் அவரது உடலில் விஷம் பாதிப்பு அதிகமாக இருந்ததால் உயர் சிகிச்சைக்காக நேற்று கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
பெட்ரோல் பங்க் கேஷியர் வாய்க்காலில் குதித்து தற்கொலை:
பவானி அருகே உள்ள எலவமலை, காமராஜ் நகரைச் சேர்ந்த வர் பரமேஸ்வரன் (44). இவர், பவானி ரோடு மாயபுரம் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் கேஷியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பரமேஸ்வரன் வழக்கம்போல் வேலைக்குச் செல்வதாக தனது தாயாரிடம் கூறி விட்டு சென்றார். பின்னர், பெட்ரோல் பங்க் பின்புறம் உள்ள காலிங்கராயன் வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, பரமேஸ்வரனின் சகோதரி காவேரி அளித்த புகாரின்பேரில், கருங்கல்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu