ஈரோடு மாவட்ட க்ரைம் செய்திகள்...

ஈரோடு மாவட்ட க்ரைம் செய்திகள்...
X

பைல் படம்.

சத்தியமங்கலம் அருகே வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறிப்பு உள்ளிட்ட ஈரோடு மாவட்ட க்ரைம் செய்திகளின் தொகுப்பை இங்கு காண்போம்.

பெண்ணிடம் நகை பறிப்பு:-

சத்தியமங்கலம் அருகே உள்ள நல்லிகவுண்டர் தோட்டத்தை சேர்ந்தவர் பெருமாள் கவுண்டர். இவரது மனைவி பெரியம்மாள் (50). சம்பவத்தன்று இரவு 8 மணி அளவில் பெரியம்மாள் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் 2 பேர் பெரியம்மாள் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து பெரியம்மாள் சத்தியமங்கலம் போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

வலிப்பு நோய்க்கு வாலிபர் உயிரிழப்பு:-

ஈரோடு, மணல்மேடு பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி (60). இவரது மகன் இளங்கோ (24).இளம் வயதிலேயே மது குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையான இளங்கோவுக்கு நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு வலிப்பு நோய் பாதிப்புக்குள்ளாகி இருந்தார். இதற்காக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று அதிகாலை 2 மணியளவில் இளங்கோவுக்கு மீண்டும் வலிப்பு ஏற்பட்டது. ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், இளங்கோ ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து ஈரோடு தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

முதியவர் சடலம் மீட்பு:-

கொடுமுடி மகுடேஸ்வரர் கோயில் அருகே உள்ள திருமண மண்டபம் முன்பாக சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடப்பதாக கொடுமுடி போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீ சார் சம்பவ இடத்துக்குச் சென்று முதியவர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுமார் 60 வயது மதிக்கத்தக்க அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இறந்த முதியவர் கடந்த 6 மாதமாக கொடுமுடி கோயில் அருகே தங்கி பக்தர்களிடம் பிச்சை பெற்று வசித்து வந்ததாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.

Tags

Next Story