ஈரோடு மாவட்ட க்ரைம் செய்திகள்...
ஈரோடு மாவட்ட க்ரைம் செய்திகள் (பைல் படம்).
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்து; டிரைவர் பலி:
கோபி அடுத்த அக்கறை கொடிவேரி இன்னாசியார் வீதியை சேர்ந்த துரைசாமி என்பவரது மகன் குபேந்திரன் (42), பிக்கப் வேன் ஓட்டுநர். குபேந்திரன் நேற்று இரவு சத்தியமங்கலத்தில் இருந்து கொடிவேரி நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். சின்னட்டிபாளையம் அருகே குபேந்திரன் மோட்டார் சைக்கிளில் வந்த போது கொடிவேரியில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி எதிரே வந்த கார் மீது மோதியதில் குபேந்திரன் தூக்கி வீசப்பட்டு இரத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பங்களாப்புதூர் போலீஸ் குபேந்திரன் உடலை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெளிமாநில லாட்டரி விற்றவர் கைது:
சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் அடுத்த குத்தியாலத்தூர் தொண்டூர் பகுதியை சேர்ந்தவர் மாரப்பன் (48), விவசாய கூலி தொழிலாளி. கடம்பூர் பகுதியில் இருந்து கேரளா மாநிலம் செல்லும் லாரி போன்ற வாகனங்களில் பாலக்காடு சென்று கேரளா லாட்டரி வாங்கி வந்து கடம்பூரில் விற்பனை செய்து வந்துள்ளார். இதுகுறித்து கடம்பூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் மாரப்பன் வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது பழைய டி.வி.பெட்டிக்குள் 34 கேரளா லாட்டரி சீட்டுகள், ஸ்மார்ட் போன் மற்றும் ரொக்க பணம் 170 ரூபாய் இருந்ததை போலீசார் கண்டறிந்து கைப்பற்றினர். இதனையடுத்து வழக்கு பதிவு செய்த கடம்பூர் போலீசார் மாரப்பனை கைது செய்து கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர்.
முதியவர் தூக்கிட்டு தற்கொலை:
சிவகிரி அடுத்த பழமங்கலத்தை சேர்ந்தவர் வீரன் (65). இவருக்கு, 2 மகன்கள் உள்ளனர். இவரது மனைவி ஏற்கனவே இறந்துவிட்டார். மகன் வேலுசாமி என்பவருடன் வீரன் வசித்து வந்தார். வீரனுக்கு கடந்த 10 ஆண்டாக வயிற்று வலி இருந்தது. இதற்காக அவர் குடலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன்பின்னும் வலி குறையவில்லை. வீரனுக்கு மது பழக்கமும் ஏற்பட்டது. இந்நிலையில் சம்பவத்தன்று வயிறு வலி அதிகமாக இருந்ததால் வெறுப்படைந்த வீரன் வீட்டில் திடீரென தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரது மகன் மற்றும் உறவினர்கள் வீரனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கும் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வீரன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சிவகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu