காவிரி ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க ஈரோடு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
Erode News- ஈரோடு கருங்கல்பாளையம் காவேரி ஆற்றங்கரையோரத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.
Erode News, Erode News Today- மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் திறக்க இருப்பதால், காவிரி ஆற்றங்கரையோர பொதுமக்கள் பாதுகாப்பாகவும், முன்னெச்சரிக்கையுடனும் இருக்க வேண்டுமென ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தென்மேற்கு பருவமழையால், சேலம் மாவட்டம் மேட்டூரில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று (28ம் தேதி) நண்பகல் 12 மணியளவில் 107.690 கன அடியை எட்டியுள்ளது. கூடிய விரைவில் அணையின் நீர்மட்டம் முழுக்கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், அணை முழுக்கொள்ளளவையும் எட்டிய உடன் அணையின் நீர் வரத்தினைப் பொருத்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்படும். இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று பிற்பகல் 1.15 மணியளவில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அதன்படி, மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலமாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், உபரி நீர் திறந்துவிடும் பொழுது கரையோரமாக வசிக்கும் பொதுமக்களை உடனடியாக மேடான பகுதிக்கு சென்று பாதுகாப்பாக இருக்குமாறும், தங்களது கால்நடைகள் மற்றும் உடமைகளையும் பாதுகாத்துக் கொள்ளும்படியும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
காவேரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் சிறுவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் உள்ளிட்ட அனைவரும் நீரில் இறங்கி குளிப்பதையோ, நீச்சல் அடிப்பதையோ, மீன் பிடிப்பதையோ, கால்நடைகள் குளிப்பாட்டுவதையோ, புகைப்படங்கள் எடுப்பதையோ முற்றிலும் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், வருவாயத்துறை, பொதுப்பணித்துறை, காவல்துறை மற்றும் உள்ளாட்சித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளின் சார்பிலும், ஒலிப்பெருக்கி மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனவே, ஆற்றங்கரை பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்புடனும், முன்னெச்சரிக்கையுடனும் இருக்குமாறு ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu