ஆன்லைனில் இழந்த 5 லட்சம் பணத்தை ஈரோடு சைபர் கிரைம் போலீசார் மீட்டு அசத்தல்..!

ஆன்லைனில் இழந்த 5 லட்சம் பணத்தை ஈரோடு சைபர் கிரைம் போலீசார் மீட்டு அசத்தல்..!
X

ஈரோடு சைபர் கிரைம் போலீசார் மூலம் மீட்கப்பட்ட ரூ.5 லட்சத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் பாலசுப்பிரமணியத்திடம் ஒப்படைத்தார்.

ஆன்லைன் மோசடியில் இழந்த ஐந்து லட்சம் ரூபாயை ஈரோடு சைபர் கிரைம் போலீசார் மீட்டு, உரியவரிடம் ஒப்படைத்தனர்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியம். இவர் ஆன்லைனில் முதலீடு செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 15-ம் தேதி அறிமுகம் இல்லாத நபர் பாலசுப்பிரமணியத்தின் செல்போன் நம்பருக்கு தொடர்புகொண்டு தான் நடத்தி வரும் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்தால் அதிக வருமானம் பெற்றுத்தருவதாக கூறியுள்ளார்.

அதனைத்தொடர்ந்து, பாலசுப்பிரமணியம் அந்த நபர் கூறிய ஆசை வார்த்தைகளை நம்பி அந்த நபர் கொடுத்த வங்கி கணக்குகளுக்கு பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூ.5 லட்சத்தை தனது வங்கிக் கணக்கிலிருந்து அனுப்பியுள்ளார். அதன் பிறகு பணத்தை பெற்றுக்கொண்ட அந்த நபரை தொடர்புகொள்ள முடியாததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாலசுப்பிரமணியம் உடனடியாக ஈரோடு சைபர் க்ரைம் காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளித்தார்.

இதனையடுத்து, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவின்பேரில், ஈரோடு சைபர் கிரைம் காவல்நிலையத்தில் இது சம்மந்தமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், சைபர்கிரைம் பிரிவு அவர்களது அறிவரைப்படி துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு புகார்தாரர் பணம் அனுப்பிய சந்தேக நபரின் வங்கிக்கணக்கு உடனடியாக முடக்கம் செய்யப்பட்டது. பின்னர் புகார்தாரர் இழந்த பணம் ரூ.5 லட்சத்தை மீட்டு ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் பாலசுப்பிரமணியத்திடம் வழங்கினார்.

இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் ஜவகர் தெரிவிக்கையில், ஆன்லைன் மோசடி மூலம் பணம் இழப்பு ஏற்பட்ட உடனடியாகவோ அல்லது 24 மணிநேரத்திற்குள்ளாகவோ விரைவாக சைபர் க்ரைம் உதவி எண் 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கும் பட்சத்தில் மோசடி மூலம் இழந்த பணத்தை மீட்டுத் தரப்படும். மேலும், அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து அல்லது தெரியாத செல்போன் எண்களிலிருந்து வரும் குறுஞ்செய்திகளை நம்பி எந்த விபரங்களையும் பதிவு செய்ய வேண்டாம் என்றும், வங்கியிலிருந்து அது போன்ற எந்த தகவல்களும் கேட்கமாட்டார்கள் என பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும் ஆன்லைனின் வரும் கவர்ச்சி கரமான விளம்பரங்களை நம்பி பணத்தை இழந்து விட வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், பொதுமக்களிடம் சைபர் கிரைம் குற்றங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அடிக்கடி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் சைபர் குற்றங்களினால் பண இழப்பை தவிர்க்கும் பொருட்டு சைபர் கிரைம் எண் 1930க்கு அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் உடனடியாக புகாரினை பதிவு செய்யுமாறு ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!