ஈரோடு: வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பதற்கான ஆலோசனை கூட்டம்
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம்.
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்தல் தொடர்பான அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான கலந்தாலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற்றது.
இதுகுறித்து அவர் கூறுகையில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியினை இன்று (01.08.2022) முதல் துவங்க இந்திய தேர்தல் ஆணையத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேற்கண்ட பணியானது 01.08.2022 முதல் தொடங்கி 31.03.2023-க்குள் முடித்திட திட்டமிடப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலினை 100 சதவிகித தூய்மையாக்குவதற்காகவும், ஒரு வாக்காளரின் விவரங்கள் ஒரே தொகுதியில் இருவேறு இடங்களில் இடம்பெறுதல் அல்லது ஒரு வாக்காளரின் விவரங்கள் இரு அல்லது பல்வேறு தொகுதிகளில் இடம்பெறுதலை தவிர்க்கும் விதமாக ஆதார் இணைக்கும் பணியானது உறுதுணையாக அமைகிறது.
வாக்காளரிடமிருந்து ஆதார் எண்ணை பெறும் வழிமுறைகள். வாக்காளர்கள் தங்களது வாக்குச்சாவடிக்கு நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் விருப்பத்தின் அடிப்படையில் படிவம் 6பி-ன் மூலமாக ஆதார் எண்களின் விவரங்களை தெரிவிக்கலாம். வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நேரடியாக வாக்காளர்களின் வீடுகளுக்கே சென்று வாக்காளர்களை நேரில் சந்தித்து தன் விருப்பத்தின் அடிப்படையில் ஆதார் எண் விவரங்களை படிவம் 6வி-ன் மூலமாக பெற்று சம்மந்தப்பட்ட வாக்குப்பதிவுஅலுவலர்கள் மூலமாக வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் இணைக்கும் பணியினை மேற்கொள்வர்.
வாக்காளர்கள் நேரடியாக தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள எண்ணுடன் NVSP Portal மற்றும் Voter Helpline Mobile App மூலமாக இணைக்கலாம்.வாக்காளர்கள் இசேவை மையம் மற்றும் மக்கள் சேவை மையம் ஆகியவை மூலமாகவும் படிவம் 6பி-ன் மூலம் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் இணைக்கலாம். வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிக்கான சிறப்பு முகாம்கள் சென்னை தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் முதன்மை அரசு செயலாளர் அவர்களின் அறிவுறுத்தலின்படி முதல் சிறப்பு முகாம் எதிர்வரும் 04.09.2022 அன்று நடைபெற இருக்கிறது.
வாக்காளரிடம் ஆதார் அட்டை இல்லை என்ற நேர்வில், இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள பின்வரும் 11 வகை சான்றில் ஏதாவது ஒரு சான்றின் நகலை வாக்காளர்கள் சமர்ப்பிக்கலாம்.அதன்படி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட அடையாள அட்டை, வங்கி / அஞ்சலகம் மூலம் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய கணக்கு புத்தகம், தொழிலாளர் நலத்துறையின் மூலம் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்படி இந்தியப் பதிவாளர் ஜெனரலால் வழங்கப்பட்ட அட்டை, இந்திய கடவுச்சீட்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணங்கள், மத்திய / மாநில / அரசு / பொதுத்துறை நிறுவனங்கள் / பொது வரையறுக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, நாடாளுமன்ற /சட்டமன்ற சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ அடையாள அட்டை, இந்திய அரசின் சமூக நலம் மற்றும் திறன் மேம்பாடு துறையால் வழங்கப்பட்ட தனி அடையாள அட்டை உள்ளிட்டவை மூலமாக வாக்காளர்கள் சமர்ப்பிக்கலாம்.
எனவே வாக்காளர்களின் ஆதார் விவரங்கள் அனைத்தும் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலரால் பாதுகாக்கப்படும்.எனவே ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் தானாக முன்வந்து ஆதார் எண்ணினை வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் இணைத்து ஈரோடு மாவட்டத்தின் எட்டு சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர் பட்டியலின் 100 சதவிகித பணிக்கு ஒத்துழைப்பு நல்குமாறும், எதிர்வரும் 01.04.2023-க்குள் அனைத்து வாக்காளர்களும் ஆதார் அட்டை எண்ணை வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் இணைத்து முன்னோடி மாவட்டமாக ஈரோடு மாவட்டம் திகழ்வதற்கு அனைத்து வாக்காளர்களும் ஒத்துழைக்க வேண்டும் என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொ) குமரன், வட்டாட்சியர் (தேர்தல்) சிவகாமி தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu