எவ்வித புகாருமின்றி விடுதி பணியாளர்கள் பணிபுரிய ஈரோடு ஆட்சியர் அறிவுறுத்தல்

எவ்வித புகாருமின்றி விடுதி பணியாளர்கள் பணிபுரிய ஈரோடு ஆட்சியர் அறிவுறுத்தல்
X

விடுதிகளில் உள்ள காப்பாளர் மற்றும் காப்பாளிகளுக்கான ஆய்வுக் கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்ற போது எடுத்த படம்.

Erode news- ஈரோடு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் விடுதிகளில் உள்ள காப்பாளர் மற்றும் காப்பாளினிகளுக்கான ஆய்வுக் கூட்டம் இன்று (3ம் தேதி) நடைபெற்றது.

Erode news, Erode news today- ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் விடுதிகளில் உள்ள காப்பாளர் மற்றும் காப்பாளினிகளுக்கு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமை வகித்தார்.

ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ், 16 அரசு ஆண்கள் பள்ளி விடுதி, 5 அரசு ஆண்கள் கல்லூரி விடுதி, 11 அரசு பெண்கள் பள்ளி விடுதி, 4 அரசு பெண்கள் கல்லூரி விடுதிகள் என 36 விடுதிகள் உள்ளது. அதனைத் தொடர்ந்து, இன்று (3ம் தேதி) மாவட்ட ஆட்சியர் தலைமையில், விடுதிகளில் உள்ள காப்பாளர் மற்றும் காப்பாளினிகளுக்கு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், அனைத்து விடுதிகளிலும் இரவு நேரங்களில் பணியாளர்கள் தங்க வேண்டும். அனைத்து விடுதிகளிலும் சிசிடிவி கேமரா இயங்கும் நிலையில் இருக்க வேண்டும். அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களை விடுதிகளில் சேர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, விடுதிகளுக்கு ஒப்பளிக்கப்பட்ட மாணாக்கர்களின் எண்ணிக்கையினை முழுமையாக நிரப்பிடவும், நூலக புத்தகங்கள், விளையாட்டு கருவிகள் அனைத்து மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் ஊக்குவிக்கவும், தேர்ச்சி பெறாத மாணாக்கர்கள் துணைத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வைக்கவும், மாணாக்கர்கள் 100 சதவீதம் தேர்ச்சி அடையும் வகையில் காப்பாளர் உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

மேலும், விடுதிகளில் தடையின்றி குடிநீர் கிடைத்திடும் வகையில், உள்ளாட்சி துறையுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், மாணாக்கர்களுக்கு நற்பண்புகள் வளர உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும், எவ்வித புகாருக்கும் இடமின்றி விடுதி பணியாளர்கள் பணிபுரிய வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் உதவி ஆட்சியர் (பயிற்சி) ராம கிருஷ்ணசாமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தர்மராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராஜ கோபால் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மழைக்காலங்களில் மின்சார ஷாக்...! எப்படி தவிர்ப்பது..?