உங்களைத் தேடி உங்கள் ஊரில்: கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் ஆட்சியர் கள ஆய்வு

உங்களைத் தேடி உங்கள் ஊரில்: கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் ஆட்சியர் கள ஆய்வு

கோபிசெட்டிபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்ட ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா.

உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' எனும் புதிய திட்டம் தொடங்கப்பட்டதையடுத்து கோபிசெட்டிபாளையம் பகுதியில்பல்வேறு இடங்களில் ஆட்சியர் கள ஆய்வு நடத்தினார்.

'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' எனும் புதிய திட்டம் தொடங்கப்பட்டதையடுத்து கோபிசெட்டிபாளையம் வட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா கள ஆய்வு நடத்தினார்.

அரசின் நலத் திட்டங்கள் மக்களுக்கு சென்றடையும் வகையிலும், குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வுகாணும் வகையில், மாவட்ட ஆட்சியர்கள் ஒவ்வொரு மாதமும் ஒருநாள் கிராமத்தில் தங்கி கள ஆய்வு செய்யும் 'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' என்கிற தமிழக அரசின் புதிய திட்டம் இன்று (ஜன. 31) முதல் நடைமுறைக்கு வந்து உள்ளது. இந்த திட்டத்தின்படி , ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா கோபிசெட்டிபாளையம் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, கோபிசெட்டிபாளையம் வட்டத்திற்கு உட்பட்ட செங்கலரை பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், கோபிசெட்டிபாளையம், நம்பியூர், பெருந்துறை மற்றும் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கலிங்கியம் ஊராட்சி கொளப்பலூர், குன்னத்தூர் பேரூராட்சிகள் மற்றும் 95 இதர ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கான சுத்த நீரேற்று நிலையம் மற்றும் கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்கான தலைமை நீரேற்று நிலையம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் குறித்தும் மற்றும் நீரேற்று நிலையங்களின் செயல்பாடுகள் குறித்தும் தொடர்புடைய அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.


தொடர்ந்து, லக்கம்பட்டி பேரூராட்சி பகுதிக்கான ரூ.19.83 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் அம்ரூத் 2.0 குடிநீர் திட்ட பணியினையும் மற்றும் விளாங்கோம்பை துணை மின்நிலையத்தினையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து, லக்கம்பட்டியில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் ரூ.2.16 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கால்நடை பன்முக மருத்துவமனை கட்டிடத்தினையும், கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் நுண் உரம் செயலாக்க மையத்தினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, இம்மையத்தின் செயல்பாடுகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

இதனையடுத்து, கோபிசெட்டிபாளையம் நகராட்சியின் சார்பில் செயல்படும் அமைதிப்பூங்காவினையும் (மின் மையானம்) மற்றும் வேளாண் உழவர் நலத்துறையின் சார்பில் செயல்படும் கரும்பு ஒட்டுண்ணி வளர்ப்பு நிலையத்தினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, கரும்பு ஒட்டுண்ணி ரகங்கள் குறித்து வேளாண்மைத்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து, வேங்கம்மையார் நகராட்சித் கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட தொடக்கப்பள்ளி மற்றும் நகராட்சி உயர்நிலைப்பள்ளியினையும் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பள்ளி மாணவ, மாணவியர்களிடம் கலந்துரையாடினார்.

அதனையடுத்து, பள்ளி வளாகத்தில் செயல்படும் அங்கன்வாடி மையத்தினை ஆய்வு மேற்கொண்டு, மையத்திற்கு வருகைபுரியும் குழந்தைகளின் விபரங்கள் மற்றும் குழந்தைகளின் எடை, உயரம் ஆகியவற்றையும் அங்கன்வாடி பணியாளர்களிடம் கேட்டறிந்தார். மேலும், நெடுஞ்சாலையின் சார்பில் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டத்தின் கீழ், ரூ.1.10 கோடி மதிப்பீட்டில் குள்ளம்பாளையம் கோரக்காட்டூர் சாலை வரை ஒரு வழி தடத்தில் இருந்து இடைவழித் தடமாக அகலப்படுத்தி சாலை மேம்பாடு செய்யும் பணியினை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளை விரைவாக முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, கோபிசெட்டிபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும் ஆய்வு மேற்கொண்டார். மேலும், கோபிசெட்டிபாளையம் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு துறைகளின் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளையும் தொடர்புடைய துறை உயர் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள்.


இந்த ஆய்வுகளின் போது, கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டாட்சியர் திவ்ய பிரியதர்ஷினி, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) ராஜகோபால், இணை இயக்குநர்கள் வெங்கடேசன் (வேளாண்மைத்துறை), பழனிவேல் (கால்நடை பராமரிப்புத்துறை), உதவி இயக்குநர் பேரூராட்சிகள் மணிகண்டன், கோபிசெட்டிபாளையம் நகராட்சி தலைவர் நாகராஜ், லக்கம்பட்டி பேரூராட்சி தலைவர் அன்னக்கொடி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாக பொறியாளர் செல்வி ராணி, நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் ஜெயலட்சுமி, கோபிசெட்டிபாளையம் வட்டாட்சியர் உத்திரசாமி உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story