இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம்: போராட்டத்தில் திமுக தலைவர்கள் பேச்சு
திமுக இளைஞரணி- மாணவரணி சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் இன்று நடைபெற்ர கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர்.
தமிழகத்தில் இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம் என்று ஈரோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர்கள் சூளுரைத்தனர்.
திமுக தலைமை அறிவித்தபடி திமுக இளைஞரணி- மாணவரணி சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு திமுக வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் தலைமை வகித்தார். மாநிலங்களவை திமுக உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ் பேசியதாவது: 60 ஆண்டுகளுக்கு முன்பு இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழகத்தில் வலுவாக நடந்தது. பலர் உயிர்த் தியாகம் செய்தனர். அப்போது இருந்த இந்திய பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு, தமிழக மக்கள் விரும்பும் வரை இந்தி மொழி புகுத்தப் படமாட்டாது என வாக்குறுதி அளித்தார்.
ஆனால் தற்பொழுது ஒன்றிய அரசு இந்தி மொழியை பல்வேறு வழிகளில் திணிக்கப் பார்க்கிறது. உதாரணத்திற்கு மத்திய பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வு ஆங்கிலத்தில் இந்தியில் மட்டும் நடைபெறும் என்றும் இந்திய அரசின் பல்வேறு துறைகளில் இந்திமொழி மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.
இது நமது எதிர்கால சந்ததிகளுக்கு மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கும் அவர்கள் ஐஐடி, ஐஏஎம், ஐஐஎஸ்சி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் நுழைய முடியாது. மத்திய அரசின் வேலை வாய்ப்புகளையும் பெற முடியாது. எனவே இந்தித் திணிப்பை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். இந்தப்போராட்டம் நமக்கானது மட்டுமல்ல. நமது சந்ததியையும் நமது தாய்மொழியையும் காக்கும் போராட்டம் ஆகும்.
அதே போன்று முன்பு ராஜாஜி இருந்த போது குலக்கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டது. அதை அண்ணா, பெரியார், கலைஞர் ஆகியோர் கடுமையாக எதிர்த்தனர். அதனால் அந்தத்திட்டம் நிறுத்தப்பட்டது. தற்பொழுது ஒன்றிய அரசு புதிய கல்விக் கல்விக் கொள்கை மூலம், அத்திட்டத்தை சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவும் தமிழக மக்களுக்கு எதிரான செயலாகும். எனவேதான் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம் என்றார்.
ஆர்ப்பாட்டத்தில், இந்திய இறையாண்மையை பாதுகாக்க வேண்டும். இந்திய அரசியலமைப்புச்சட்டத்துக்கு எதிராக மாநிலங்களில் உரிமையைப் பறிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். பண்டித ஜவஹர்லால்நேரு கொடுத்த இந்தி திணிப்புக்கு எதிரான வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை மத்திய அரசு புகுத்துவதை கைவிட வேண்டும். ஒரே நாடு ஒரே மொழி ஒரே கலாசாரம் என்ற கொள்கையை மத்திய அரசு திணிக்கக் கூடாது. மாநில மொழியை அழிக்க நினைக்க கூடாது. மாநில உரிமைகளை பறிக்கக் கூடாது.
இந்தி திணிப்பின் மூலம் மற்றொரு மொழி போரை மக்கள் மீது திணிக்கக் கூடாது. பல்லாயிரம் ஆண்டுகள் கடந்த தமிழ் மொழி பாதுகாக்கப்பட வேண்டும். ஒன்றிய அரசு அலுவலகங்களில் இந்தியைத் திணிக்கக் கூடாது. பொது நுழைவுத் தேர்வு திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன சேர்மன் குறிஞ்சி என். சிவக்குமார், மாவட்ட திருக்கோயில்கள் அறங்காவல்குழுத்தலைவர் எல்லப்பாளையம் சிவக்குமார், நெசவாளர் அணி மாநிலச்செயலாளர் எஸ்.எல்.டி.பி. சச்சிதானந்தம், முன்னாள் எம்எல்ஏ வி.சி. சந்திரகுமார், ஈரோடு மாநகர செயலாளர் மா. சுப்ரமணியம், மேயர் நகரத்தினம், இளைஞர் அணி செயலாளர் பிரகாஷ் மாணவரணி செயலாளர் திருவாசகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu