சாலை விரிவுபடுத்தும் பணி: வீரப்பன்சத்திரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்
ஈரோடு ஸ்வஸ்திக் கார்னரில் இருந்து சத்தி ரோட்டில் சாலை விரிவுபடுத்தும் பணிகள் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் அருகில் ஒரு பகுதியில் சாலையில் பள்ளம் தோண்டப்பட்டது. இதன் காரணமாக அந்த வழியாக ஒருபுறம் மட்டுமே வாகனங்கள் செல்ல முடிந்தது.
ஒரு புறம் மட்டுமே வாகனங்கள் சென்று வருவதால் அந்தப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வீரப்பன்சத்திரத்தில் இருந்து சி.என்.கல்லூரி வரையும், மறுபுறம் ஸ்வஸ்திக் கார்னர் வரையும் வாகனங்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. காலை நேரம் என்பதால் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகளும், அலுவலகத்துக்கு செல்பவர்களும் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர்.
இதேபோல் ஈரோடு பேருந்து நிலையத்திலும் காலை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அங்கு திருப்பூர், கோவை, பழனி உள்ளிட்ட ஊர்களில் இருந்து வரும் வாகனங்கள் அகில்மேடு வீதி வழியாக வந்து பேருந்து நிலையத்துக்குள் நுழைகின்றன. அதேசமயம் கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பேருந்துகளும் வெளியேறுவதால் பேருந்து நிலையத்தில் உள்ள நவீன கழிப்பிட கட்டடம் அருகில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மேலும், கட்டுமான பணிகள் நடந்து வருவதால் சேலம், நாமக்கல், மதுரை, கரூர் உள்ளிட்ட ஊர்களுக்கு பயணிகளை ஏற்றக்கூடிய பேருந்துகள், நவீன கட்டட கழிப்பிடம் பகுதியிலேயே சென்று நிறுத்த வேண்டி உள்ளது.
இது குறித்து பொதுமக்கள் மற்றும் பயணிகள் கூறுகையில், பேருந்து நிலையத்தில் கட்டுமான பணிகள் நடந்து வருவதால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அதற்கு திருப்பூர், கோவை, ஊட்டி, பழனி, வெள்ளக்கோவில், கரூர், மதுரை உள்ளிட்ட ஊர்களில் இருந்து வரும் பேருந்துகளை மேட்டூர் ரோடு வழியாக ஈரோடு பேருந்து நிலையத்துக்குள் வருமாறு போக்குவரத்து மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu