கடந்த 16 மாத திமுக ஆட்சியில் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை: தமாகா குற்றச்சாட்டு
தமாகா இளைஞரணி மாநிலத்தலைவர் எம். யுவராஜா(பைல் படம்)
மக்கள் எந்த வாக்குறுதிகளை நம்பி திமுக விற்கு வாக்களித்தார்களோ அந்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப் படவில்லை என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி குற்றம்சாட்டியுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் எம். யுவராஜா வெளியிட்ட அறிக்கை: விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்காமல் தமிழக முதல்வர் ஸ்டாலின் திரைப்படத்திற்கு விமர்சனம் செய்து கொண்டிருப்பது வாக்களித்த மக்களுக்கு செய்யும் துரோகச்செயலாகும்.
தமிழகத்தில் விடியலை தருகிறோம் என்று கூறிவிட்டு தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், திமுக வினரின் பொய்யான நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களித்தனர். இதன் காரணமாக, கடந்த 16 மாத ஆட்சியில் பொதுமக்கள் பல துன்பங்களை மட்டுமே அனுபவித்து வருகின்றனர்.
திமுகவின் வாக்குறுதிகளில் நீட் தேர்வு ஒரே கையெழுத்தில் ரத்து செய்யப்படும் என மேடைக்கு மேடை தேர்தல் பிரசாரத்தின் போது திமுக தலைவர்களால் பேசப்பட்டது. ஆனால் நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லை. 30 வயதுக்கு உட்பட்ட தமிழகக் கல்லூரி மாணவர்களின் கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டளது. ஆனால் இது நாள் வரை திமுக அரசு வாய் திறக்கவில்லை.
கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 5 சவரனுக்கு உட்பட்ட நகைகள் ரத்து செய்யப்படும் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தனர். ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன் பல்வேறு நிபந்தனைகளை விதித்து கிட்டத்தட்ட 75 விழுக்காடு பயனாளிகளின் நகை கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது என அறிவித்தது. மற்றொரு வாக்குறுதி மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறையை கொண்டுவரப் போவதாக வாக்குறுதி அளித்தவர்கள் இப்போது அதைப்பற்றி வாய் திறக்க மறுக்கிறார்கள்.
திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக, அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கட்டுமான பொருள் தொடங்கி சொத்து வரி, குடிநீர், மின்சார கட்டணம், ஆவின் பொருட்கள் விலை உயர்வு என அனைத்து கட்டணமும் உயர்ந்து விட்டது. பிரதமர் விலையை குறைத்தும் தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முன் வரவில்லை. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது
கடந்த 16 மாத திமுக ஆட்சியில் விலை உயர்வு மட்டுமே சாதனையாக உள்ளது. சென்னை மக்கள் அனைவரும் மழை வெள்ளத்தால் தத்தளித்துக் கொண்டிருக்கும் போது, தனது மகன் உதயநிதியின் நிறுவனம் வாங்கி வெளியிட்டுள்ள லவ் டுடே படத்தை தனது குடும்பத்துடன் பார்த்து பார்த்து ரசித்து கொண்டிருப்பதையும், டெல்டா மாவட்டமே மழை வெள்ளத்தால் மிதந்து மக்கள் கண்ணீரும் கம்பலையுமாய் இருந்து கொண்டிருக்கும் போது மாநிலத்தின் முதல்வர், தனது மகன் நடித்த கலகத்தலைவன் படத்தை 3 மணி நேரம் பார்த்து ரசித்துக் கொண்டிருப்பதையும் வாக்களித்த அப்பாவி மக்கள் ரசிக்கவில்லை.
நடவு நட்ட விவசாயி ஏக்கருக்கு 30 ஆயிரம் வரை செலவு செய்து மழையால் பயிர்கள் நாசமாகிவிட்டன அவர்களுக்கு இடைக்கால நிவாரண நிதியாக ரூபாய் 10 ஆயிரம் வழங்கி, கவலையை போக்கி இருக்க வேண்டும். தண்ணீர் புகுந்த வீட்டுக்கு ரூபாய் ஆயிரம் கொடுத்த முதல்வர், மயிலாடுதுறை மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவித்தால் மத்திய அரசு கொடுக்கும் நிவாரணம் தொகையையும் அந்த மாவட்ட மக்களுக்கு கிடைக்கச்செய்யலாம். இதையெல்லாம் சிந்திக்காமல், மக்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாத அரசாக இந்த அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது.
கடந்த 16 மாத திமுக ஆட்சியில் தமிழக முதல்வர் தன்னை விளம்பரபடுத்தி கொள்வதிலேயே ஆர்வமாக உள்ளார் . தமிழகத்தில் வெளியாகும் அனைத்து திரைப்படங்களையும், முதல்வர் மகன் உதயநிதியின் நிறுவனம் வாங்கி வியாபாரம் செய்கிறது. அவர்கள் குடும்பமே கதை, திரைக்கதை வசனம் எழுதியவர்கள் என்பதால், மக்களை எப்படி எல்லாம் ஏமாற்றலாம் என்று யோசிக்கின்றனர். இனிவரும் காலங்களிலாவது வாக்களித்த மக்களுக்கு வஞ்சனை செய்யாமல் மக்களை வாட்டி வதைக்கும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மக்கள் விரும்பும் அரசாக விளங்க வேண்டும் என அந்த அறிக்கையில் யுவராஜா தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu