ஈரோடு அரசு மருத்துவமனையில் விரைவில் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி: அமைச்சர் தகவல்

ஈரோடு அரசு மருத்துவமனையில் விரைவில் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி: அமைச்சர் தகவல்
X

ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் சு.முத்துசாமி பயனாளிகளுக்கு காப்பீட்டு அட்டைகளை வழங்கினார்.

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி விரைவில் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துடன் பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டம் இணைந்து 4 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, பயனாளிகளுக்கு பரிசு மற்றும் காப்பீடு அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமை வகித்தார். கிழக்குத் தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா, எம்பி கணேசமூர்த்தி, துணை மேயர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, காப்பீட்டு திட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளை சேர்ந்த 3 காப்பீட்டு திட்ட தொடர்பு அலுவலர்களுக்கு சான்றிதழ்களையும், 5 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு திட்ட அட்டைகளையும் மற்றும் இத்திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவிகள் 3 பேருக்கும் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் களை வழங்கினார்.

தொடர்ந்து, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளிகளுக்கு பரிசுகள் மற்றும் முதலமைச்சரின் காப்பீடு அட்டைகளை வழங்கி அமைச்சர் முத்துசாமி பேசியதாவது: நமது முதலமைச்சர் தமிழக மக்களின் நலனுக்காக எண்ணற்ற பல்வேறு திட்டங்களை சிறப்புடன் செயல்படுத்தி வருகிறார். முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் 23.07.2009ல் தொடங்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டத்துடன் கடந்த 2018 முதல் இணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலமாக பயனாளிகளுக்கு ரூ. 5 லட்சம் வரை மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலமாக 7 அரசு மருத்துவமனைகள், 50 தனியார் மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்டு மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலமாக கடந்த ஒரு வருடத்தில் ஈரோடு மாவட்டத்தில் 18,189 பயனாளிகளுக்கு ரூ. 26 கோடியே 96 லட்சத்து 66 ஆயிரத்து 985 மதிப்பிலான சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 4,074 குடும்பங்களுக்கு காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. ரூ.1லட்சத்து 20 ஆயிரம் மற்றும் அதற்கு குறைவான ஆண்டு வருமானம் உள்ள குடும்பங்கள் இத்திட்டத்தில் மருத்துவ சிகிச்சை பெற முடியும். இத்திட்டத்தினை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

மேலும், ஈரோடு அரசு மருத்துவமனையில் உள்ள எம்ஆர்ஐ ஸ்கேன், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஈரோடு அரசு மருத்துவமனைக்கு புதிய எம்ஆர்ஐ ஸ்கேன் கருவி விரைவில் வந்துவிடும். தாளவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் விரைவில் அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் என்றார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் நவமணி கந்தசாமி, பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனை முதல்வர் டாக்டர் மணி, இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) பிரேமகுமாரி, முதலமைச்சரின் விரி வான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் மாவட்ட திட்ட அலுவலர் விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!