கோபி அருகே உள்ள விளாங்கோம்பை, கம்பனூர் பழங்குடியினர் காலனியில் மலைவாழ் மக்களுக்கு வன உரிமை பட்டா வழங்குவது குறித்து ஈரோடு ஆட்சியர் ஆய்வு!

கோபி அருகே உள்ள விளாங்கோம்பை, கம்பனூர் பழங்குடியினர் காலனியில் மலைவாழ் மக்களுக்கு வன உரிமை பட்டா வழங்குவது குறித்து ஈரோடு ஆட்சியர் ஆய்வு!
X

தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட விளாங்கோம்பை பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பெற்று, குறைகள் கேட்டறிந்த போது எடுத்த படம்.

"உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ், கோபிசெட்டிபாளையம் வட்டத்திற்கு உட்பட்ட தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், விளாங்கோம்பை மற்றும் கம்பனூர் பழங்குடியினர் காலனியில் மலைவாழ் மக்களுக்கு வன உரிமை பட்டா வழங்குவது குறித்து மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார்.

கோபிசெட்டிபாளையம் வட்டத்திற்கு உட்பட்ட தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், விளாங்கோம்பை மற்றும் கம்பனூர் பழங்குடியினர் காலனியில் மலைவாழ் மக்களுக்கு வன உரிமை பட்டா வழங்குவது குறித்து மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (ஏப்ரல் 16) பல்வேறு பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், விளாங்கோம்பை மற்றும் கம்பனூர் பழங்குடியினர் காலனியில் மலைவாழ் மக்களிடம் வன உரிமை பட்டா வழங்குது, பெயர் மாற்றம், வீட்டுவரி செலுத்துதல், தெருவிளக்கு, குடிநீர் விநியோகம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு, கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

மேலும், தோட்டக்கலைத்துறையின் மூலம் விவசாயிகளுக்கு வேளாண் விதைகள் மற்றும் வேளாண் பொறியியல் துறையின் மூலம் இயந்திரங்களை தகுதியான பயனாளிகளுக்கு வழங்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.


அதனைத் தொடர்ந்து, கம்பனூர் காலனி பகுதிகளில் செயல்படும் குழந்தைகள் மையத்தில் ஆய்வு மேற்கொண்டு, குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ள உணவின் மாதிரி, குழந்தைகளின் எடை, உயரம் ஆகியவற்றினை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் நடைமுறை கோப்புகளை பார்வையிட்டு, ஊரக வளர்ச்சித்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளின் தற்போதைய நிலை, பணிகளின் முன்னேற்றம் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இதனையடுத்து, கூகலூர் பகுதியில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் மலர்விழி என்பவர் 1 ஏக்கர் பரப்பளவில் 4000 தாய்வான் பிங்க் ரகம் டிராகன் (கமலம்) பழத்தோட்டம் அமைத்து அங்கக வேளாண்மை முறையில் சாகுபடி செய்து வருவதை பார்வையிட்டார்.


பின்னர், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், 0.20.0 எக்டர் பரப்பளவில் ரூ.40 ஆயிரம் மதிப்பீட்டில் டிராகன் (கமலம்) பழத்தோட்டத்திற்கு நிரந்தர கல்பந்தல் மற்றும் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் ரூ.59 ஆயிரத்து 110 மதிப்பீட்டில் சொட்டுநீர் பாசனம் அமைத்துள்ளதை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, விவசாயியுடன் கலந்துரையாடியபோது, தற்பொழுது 2-ம் வருட காய்ப்பிற்கு பூக்கும் தருவாயில் உள்ளதாகவும், முதலாமாண்டு ரூ.4.5 லட்சம் முதலீடு செய்யப்பட்டு, 3.5 டன் பழங்கள் அறுவடை செய்துள்ள நிலையில், இந்த ஆண்டு 10 டன் மகசூல் எதிர்பார்க்கப்படுவதாகவும் விவசாயி தெரிவித்தார்.


அதைத் தொடர்ந்து, கூகலூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, உள்நோயாளிகள் பிரிவு, வெளி நோயாளிகள் பிரிவு, மருந்துகள் இருப்பு, பராமரிக்கப்படும் பதிவேடுகள் ஆகியவற்றை பார்வையிட்டார்.

மேலும், சிகிச்சை முறை குறித்து நோயாளிகளிடம் கேட்டறிந்தார். மேலும் சுகாதார நிலையத்தில் செயல்படும் சித்த மருத்துவ பிரிவினை பார்வையிட்டு, சுகாதார நிலையத்தினை தூய்மையாக பராமரிக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து, அளுக்குளியில் முதன்மை பதப்படுத்தும் நிலையத்தில் வாழைக்காய், கிழங்கு வகைகள், வாழை இலை உள்ளிட்ட விளைபொருட்கள் தரம் பிரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.


மேலும், அதே பகுதியில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில் செயல்பட்டு வரும் 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதனக் கிடங்கில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுகளின் போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) லோகநாதன், கோபிசெட்டிபாளையம் வருவாய் வட்டாட்சியர் சரவணன் மற்றும் கோபிசெட்டிபாளையம், டி.என்.பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story