ஈரோடு அரசு மருத்துவமனை ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டம்
ஈரோடு அரசு மருத்துவமனையில் தனியார் நிறுவனம் சார்பில் 132 பேர் ஒப்பந்தத் தொழிலாளர்களாகப் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், தூய்மைப்பணி, நோயாளிகளை அழைத்துச் செல்லுதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்களுக்கு அறிவிக்கப்பட்ட ஊதியத்தின்படி ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 707 வீதம் மாதத்துக்கு ரூ. 21 ஆயிரம் வழங்க வேண்டும். ஆனால், ஒப்பந்த நிறுவனமோ நாள் ஒன்றுக்கு ரூ. 280 வீதம் மாதத்துக்கு ரூ. 8 ஆயிரத்து 400 மட்டுமே வழங்கி வருவதாகக் கூறப்படுகிறது.
எனவே, அரசு அறிவித்த ஊதியத்தை முழுமையமாக வழங்கவேண்டும் என வலியுறுத்தி கடந்த சில வாரங்களுக்கு முன் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஓய்வு அறை, வார விடுமுறை வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கோரிக்கை குறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த நிலையில், கடந்த 3ம் தேதி, தொழிலாளர் நலத்துறை அலுவலர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது . ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்த நிலையில், அறிவித்தபடி ஊதியத்தை முழுமையாக வழங்கக் கோரி ஒப்பந்த ஊழியர்கள் பணியைப் புறக்கணித்து அரசு மருத்துவமனை வளாகத்தில் கடந்த மூன்று நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து 3வது நாளாக ஒப்பந்த ஊழியர்கள் தொடர்ந்து பணியை புறக்கணித்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒப்பந்த ஊழியர்களின் பணி புறக்கணிப்பு போராட்டத்தால் அரசு மருத்துவமனை வளாகத்தில் தூய்மை பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இரவிலும் ஆண் பெண் ஒப்பந்த பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பணியாளர்கள் கூறும்போது, எங்களை பணியில் அமர்த்திய நிறுவனம் ஒப்பந்தத்தை மீறி செயல்பட்டு வருகிறது. எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை நாங்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம். அப்படியும் எங்கள் கோரிக்கை நிறைவேறவில்லை என்றால் அடுத்த கட்டமாக சட்டப் போராட்டம் நடத்த முடிவு செய்து உயர்நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என கூறினர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu