பேரறிவாளன் விடுதலையைக் கண்டித்து ஈரோட்டில்  காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பேரறிவாளன் விடுதலையைக் கண்டித்து ஈரோட்டில்  காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
X

பேரறிவாளன்  விடுதலையைக் கண்டித்து ஈரோட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்

உச்சநீதிமன்றம் பேரறிவாளன் ஒன்றும் நிரபராதி என தீர்ப்பில் குறிப்பிடவில்லை. அவர் கொலைக் குற்றவாளிதான் என காங்கிரஸார் புகார்

பேரறிவாளன் விடுதலையைக் கண்டித்து ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளனை உச்சநீதிமன்ற விடுதலை செய்ததை கண்டித்து காங்கிரஸார் வாயில் வெள்ளைத் துணி கட்டி ஈரோடு மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் லெனின் பிரசாத் பேசியதாவது: காங்கிரஸ் கட்சி இந்த விடுதலையை எதிர்க்கிறது. பேரறிவாளன் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளி. எனவே அவரது விடுதலையை இன்று ஏதோ தியாகியின் விடுதலை போல சிலர் கொண்டாடுவது கண்டிக்கத்தக்கது. ராஜீவ் காந்தி உடன் 18 பேர் உயிரிழந்துள்ளார்கள். அவர்களும் தமிழர்கள்தானே. அவர்களைப் பற்றி யாரும் பேசவில்லை. இதே போன்று ஆயிரக்கணக்கானோர் சிறைகளில் பல ஆண்டுகளாக வாடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களைப் பற்றியும் யாரும் கவலைப்படவில்லை. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவரது குழந்தைகள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் மனிதாபிமான அடிப்படையில் ராஜீவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை தர வேண்டாம் என்று கூறினார்கள் .

ஆனால் காங்கிரஸ் தொண்டர்கள் ஆகிய நாங்கள் அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும . சிறையிலிருந்து விடுவிக்கக் கூடாது என்று கருதுகிறோம் .உச்சநீதிமன்றம் பேரறிவாளன் ஒன்றும் நிரபராதி என தீர்ப்பில் குறிப்பிடவில்லை. ஆனால் ஊடகங்களும் சில கட்சியினரும் அவரை ஒரு தியாகி போல சித்தரிக்கின்றனர். இது கண்டிக்கத்தக்கது .

தமிழக முதலமைச்சர் ராஜீவ் காந்தி படுகொலையில் சம்பந்தப்பட்ட மற்றவர்கள் விடுதலை குறித்து சட்ட ஆலோசனை செய்யப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். அது திமுகவின் நிலைப்பாடு .ஆனால் காங்கிரஸின் நிலைப்பாடு குற்றவாளிகளை விடுதலை செய்யக்கூடாது என்பதே ஆகும். இன்று ராஜீவ் காந்தி உயிருடன் இருந்திருந்தால் இந்த நாடு மிகப்பெரிய வல்லரசாக இருக்கும். அவர் இல்லாததால்தான் பிற்போக்கு சக்திகள் இன்று ஆதிக்கம் செலுத்துகின்றன .நாடு பின்தங்கியுள்ளது என்றார் அவர். இதில், ஈரோடு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் செந்தூர் ராஜகோபால் உட்பட பலர் உடனிருந்தனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!