வெளிமாநில வியாபாரிகள் வராததால் மாட்டு சந்தையில் வியாபாரம் மந்தம்

வெளிமாநில வியாபாரிகள் வராததால் மாட்டு சந்தையில் வியாபாரம் மந்தம்
X

கருங்கல்பாளையம் மாட்டு சந்தை.

கருங்கல்பாளையம் மாட்டு சந்தையில் முககவசம் அணியாமல் வந்த வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ஈரோடு கருங்கல்பாளையத்தில் ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மாட்டு சந்தை கூடுவது வழக்கம். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். இதேபோல் கேரளா , கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா, நேபாளம், கோவா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து மாடுகள் வாங்கி செல்வதும் வழக்கம்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் வெளிமாநில வியாபாரிகள் கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தைக்கு வரவில்லை. இதனால் மாடுகள் வரத்து குறைவாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று கூடிய மாட்டுச்சந்தையிலும் வெளிமாநில வியாபாரிகள் வருகை இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இன்று பசு - 300 எருமை - 150, கன்று - 50 என மொத்தம் 500 மாடுகள் மட்டுமே வரத்தாகி இருந்தது. வெளிமாநில வியாபாரிகள் வராததால் மாட்டு வியாபாரம் மந்தமாகவே இருந்தது.

இந்நிலையில் ஈரோடு மாநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மாநகர் பகுதியில் கடந்த 2 நாட்களில் மட்டும் 150 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று கூடிய மாட்டு சந்தையில் வியாபாரிகள் சிலர் முக கவசம் அணியாமல் வந்திருந்தனர். இதையடுத்து மாநகராட்சி சார்பில் நியமிக்கப்பட்டிருந்த அலுவலர்கள் மாட்டுச் சந்தையில் முகாமிட்டு முககவசம் அணியாமல் வந்த வியாபாரிகளுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!