பயிர் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பாஜக சார்பில் மனு

பயிர் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பாஜக சார்பில் மனு
X

பாஜக சார்பில் மனு அளிக்க வந்த விவசாயிகள்.

பயிர் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

ஈரோடு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் பொதுச் செயலாளர் குணசேகரன் தலைமையில் நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:

ஈரோடு மாவட்டத்தில் 160- க்கும் மேற்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன . இதில் பெரும்பான்மையான விவசாயிகள் அனைவரும் உறுப்பினர்களாக உள்ளனர் . ஆனால் கடந்த 6 மாதங்களாக ( ஏப்ரல் 2021 முதல் செப்டம்பர் 2021 ) பயிர்கடன் வழங்கப்படவில்லை, உரமும் கிடைப்பதில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இந்நிலையில் அக்டோபர் 2021 முதல் கூட்டுறவு சங்கங்களில் கடன் வழங்குவதாக அறிந்து கூட்டுறவு சங்கங்களை நாடினோம் . கூட்டுறவு சங்க அதிகாரிகள் நில ஆவணங்களான பட்டா , சிட்டா மற்றும் கிராம நிர்வாக அலுவலரிடம் நடப்பு பசலிக்காக அடங்கல் ( 1431 ) பெற்று வர தெரிவிக்கின்றனர் .

கடந்த காலங்களில் இது போன்ற நடைமுறை இல்லை. பயிர் கடன் பெற பட்டா சிட்டா உடன் ஜமாபந்தி முடிந்த பசலிஆண்டுக்கான அடங்கல் ( 1430 ) மட்டுமே கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்று வழங்கப்பட்டு வந்தது . தற்போது நடப்பு பசலிக்கு கிராம நிர்வாக அலுவலரிடம் அடங்கல் வழங்க கோரினால் அடங்கல் வழங்க மறுக்கின்றனர். காரணம் நடப்பு பசலிக்கு பயிர் செய்து முடித்த பின்பு தான் அடங்கல் வழங்க முடியும் என தெரிவிக்கின்றனர்

மேற்கூறிய காரணங்களால் விவசாயிகள் கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர் கடன் பெற முடியாமலும் உரம் கிடைக்காமலும் அவதிப்படுகிறார்கள் . எனவே கலெக்டர் வருவாய் துறை மற்றும் கூட்டுறவு துறை அலுவலர்களுக்கு தக்க உத்திரவு பிறப்பித்து உடனடியாக விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கவும் , உரம் தட்டுபாடின்றி கிடைக்கவும் ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்