தேசிய கொடி ஆர்டர் என்ற பெயரில் ரூ.4 லட்சம் மோசடி செய்த தம்பதி மீது வழக்கு

தேசிய கொடி ஆர்டர் என்ற பெயரில் ரூ.4 லட்சம் மோசடி செய்த தம்பதி மீது வழக்கு
X
தேசிய கொடி ஆர்டர் என்ற பெயரில் ரூ.4 லட்சம் மோசடி செய்த ஈரோடு தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் பீளமேடு எல்லை தோட்டம் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன். இவரது மனைவி சித்ரா. சித்ரா ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது நிறுவனம் சார்பில் தேசியக்கொடி ஆர்டர் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

அப்போது ஈரோடு மாவட்டம் திங்களூர் அடுத்த பாதி பாளையம் பகுதியைச் சேர்ந்த அய்யப்பன் (48) என்பவர் சித்ராவை சந்தித்து தான் திங்களூரில் தபால் நிலையத்தில் வேலை பார்த்து வருவதாகவும் தான் தேசியக்கொடி ஆர்டர் எடுத்து வருவதாகவும் கூறி அவரிடம் தேசிய கொடியை காண்பித்துள்ளார். இதை உண்மை என்று நம்பிய சித்ரா அவரிடம் தேசிய கொடி ஆர்டர் கொடுத்துள்ளார்.

இதையடுத்து அய்யப்பன் தனது மனைவி கவிதா வங்கி கணக்கிற்கு முன் பணம் போடுமாறு சித்ராவிடம் கூறியுள்ளார். இதை நம்பி சித்ரா, கவிதாவின் வங்கி கணக்கிற்கு கடந்த 4-ந் தேதி ரூ.3 லட்சத்தை முன்பணமாக அனுப்பியுள்ளார். அதைத்தொடர்ந்து அவரது வங்கிக் கணக்கிற்கு மேலும் ரூ.1 லட்சம் பணம் அனுப்பி உள்ளார். 2 நாட்களில் வேலையை முடித்து ஆர்டர் கொடுத்து விடுவதாக கூறி அய்யப்பன் சென்றுவிட்டார். ஆனால் அதன் பிறகு அவர் செல்போனை சுவிட்ச்-ஆப் செய்துவிட்டார்.

சித்ரா பலமுறை போன் செய்தும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டதால் நேரடியாக திங்களூர் சென்று அய்யப்பனிடம் இது குறித்து கேட்டுள்ளார். ஆனால் அய்யப்பன் ஏதேதோ காரணம் சொல்லி நாட்களை கடத்தி வந்தார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சித்ரா இது குறித்து கோவை மேற்கு மண்டல காவல்துறை அலுவலகத்திற்கு புகார் அளித்தார். அந்தப் புகார் நகல் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது.

பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் அந்த புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு திங்களூர் போலீசாருக்கு உத்தரவிட்டார். புகாரின் பேரில் திங்களூர் போலீசார் அய்யப்பன் மற்றும் கவிதா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!