ஈரோட்டில் பணத்திற்காக வடமாநில தொழிலாளர்களை கடத்திய 7 பேர் கைது

ஈரோட்டில் பணத்திற்காக வடமாநில தொழிலாளர்களை கடத்திய 7 பேர் கைது
X

வடமாநில தொழிலாளர்களை கடத்தியதாக கைது செய்யப்பட்ட 7 பேர் போலீசாருடன் உள்ளனர்.

ஈரோட்டில் பணத்திற்காக வடமாநில தொழிலாளர்களை கடத்திய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் வால்மீகி. இவர் தனது நண்பர்களான ஜிதேந்திர குமார், வினய்குமார், பவன்குமார், அசோக்குமார், சித்தார்ய குமார், ஆகியோருடன் கடந்த மாதம் 14-ம் தேதி பீகாரில் இருந்து வேலை தேடி கேரளாவிற்கு ரெயிலில் வந்து கொண்டு இருந்தார். அப்போது பீகாரை சேர்ந்த பிபீன் குமார் என்பவர் தனது நண்பர் மூலமாக வால்மியை தொடர்பு கொண்டு தான் வேலை வாங்கித் தருவதாகக் கூறியும் தன்னுடன் இருக்கும் நண்பர்களை அழைத்துக் கொண்டு ஈரோட்டிற்கு வரும் படியும் கூறியுள்ளார்.

இதனை உண்மை என நம்பிய வால்மீகி மற்றும் அவரது நண்பர்கள் ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வந்தடைந்தனர். ஏற்கனவே ஈரோடு ரெயில் நிலையத்தில் பிபீன் குமார் தனது நண்பர்களுடன் காத்துக் கொண்டிருந்த நிலையில் வால்மீகி மற்றும் அவரது நண்பர்கள் வந்தவுடன் அவர்களை ஈரோடு பெரிய சேமூர் பகுதியில் உள்ள வீட்டில் அடைத்து வைத்து ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை கொடுக்க வேண்டும் என்றும் கொடுத்தால் தான் தங்களை விடுவதாகவும் மிரட்டி உள்ளனர். மேலும் ஆன்லைன் மூலமாக பணம் அனுப்ப வேண்டும் என்றும் மிரட்டி உள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த வால்மீகி மற்றும் அவரது நண்பர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் பீகாரில் உள்ள தங்களது உறவினர்களை தொடர்பு கொண்டு ரூ.1.10 லட்சம் ஜி.பே. மூலமாக அனுப்பி வைத்து உள்ளனர். பணம் வந்த உடனே பிபீன் குமார் மற்றும் அவரது நண்பர்கள் கடத்தி வைத்திருந்த 6 பேரையும் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து டெம்போ டிராவலர் மூலமாக அவர்களை கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் விட்டு சென்றனர்.

பின்னர் அங்கிருந்து வால்மீகி உட்பட 6 பேரும் சென்னையில் உள்ள நண்பர் வீட்டுக்கு சென்று அங்கிருந்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். தொடர்ந்து இது குறித்து சென்னை போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து சென்னை போலீசார் புகார் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகருக்கு அந்த புகார் நகலை அனுப்பி வைத்தனர்.

அதன் பேரில் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் பெரிய சேமூர் பகுதியில் இருந்த பீகாரை சேர்ந்த பிபீன் குமார் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த ஈரோட்டை சேர்ந்த தமிழ் செல்வன், சுபாஷ், பிரகாஷ், சசிகுமார், பூபாலன், கண்ணன் ஆகிய 7 பேரை 8 பிரிவுகளின் கீழ் கைது செய்தனர்.

மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் புகழேந்தி, மோதிலால் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர். குடும்பத்தை காப்பாற்ற அனைத்து உறவுகளையும் விட்டுவிட்டு குறைந்த ஊதியத்திற்காக மாநிலம் விட்டு மாநிலம் வரும் வடமாநில தொழிலாளர்களை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய சம்பவத்தில் 7 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story