/* */

பணப்பட்டுவாடா பரிசுப்பொருட்கள் விநியோகம்....ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடக்குமா?

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிக அளவில் பணப்பட்டுவாடா நடைபெறுவதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார்கள் குவிந்துள்ளது.

HIGHLIGHTS

பணப்பட்டுவாடா பரிசுப்பொருட்கள் விநியோகம்....ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடக்குமா?
X

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் (ஈரோடு மாநகராட்சி அலுவலகம்)

ஈரோடு கிழக்குத் தொகுதியில் வரும் 27ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் மற்றும் சுயேச்சைகள் உள்ளிட்ட 77 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதிக்கான பிரச்சாரம் வரும் 25ம் தேதி மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. அன்று மாலை முதல் வெளியூரில் இருந்து வந்த அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக, வாக்காளர்களை கொட்டகையில் அடைத்து வைத்து, தினமும் ரூ.500 முதல் ரூ 1000 வரை பணம் விநியோகம், சுற்றுலா அழைத்துச் செல்லுதல், முக்கிய தலைவர்களின் பிரச்சாரத்தில் பங்கேற்கச் செய்து, அதற்கு பணம் வழங்குதல், அசைவ விருந்து வழங்குதல் உள்ளிட்ட விதிமீறல்கள் நடந்து வருகின்றன.

இது தொடர்பாக பல வீடியோக்கள் வெளியானது. அதன் அடுத்த கட்டமாக, இரவு நேரங்களிலும், அதிகாலை நேரங்களிலும் வீடு, வீடாகச் செல்லும் அரசியல் கட்சியின் நிர்வாகிகள், வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பணம் வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை வாக்குகள் உள்ளன என்பதை ஏற்கனவே சரிபார்த்து வைத்து, வாக்காளர் அடையாள அட்டையைச் சரிபார்த்து, வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பணத்தை வழங்கி வருகின்றனர். சில இடங்களில் டோக்கன் வழங்கப்பட்டு, குறிப்பிட்ட இடங்களில் அதனைக் கொடுத்து பணம் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, நேற்று முன் தினம் இரவு மற்றும் நேற்று காலை முதல் மதியம் வரை பல்வேறு இடங்களில் வாக்குக்கு பணம் வழங்கியுள்ளனர். 2வது நாளாக இன்றும் பணம் விநியோகம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. மேலும், வேட்டி, சேலை, குடம் போன்ற பரிசுப்பொருட்கள் விநியோகமும் பல இடங்களில் நடந்துள்ளது. இது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல் தொடர்பான பணிகள் குறித்து இந்திய தேர்தல் கமிஷனின் துணை தேர்தல் கமிஷனர் அஜய் தலைமையில் காணொலி மூலம் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. டெல்லியில் இருந்தபடி அஜய் ஆலோசனை நடத்தினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி இந்த கூட்டத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். ஈரோடு மாவட்டத்தில் இருந்து மாவட்ட தேர்தல் அதிகாரி, போலீஸ் சூப்பிரண்டு, மத்திய தேர்தல் பார்வையாளர்கள் (பொது, செலவீனம் மற்றும் போலீஸ் பார்வையாளர்கள்) பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், ஈரோடு கிழக்குத் தொகுதியில் இடைத்தேர்தலை நேர்மையுடனும், சுதந்திரமாகவும் நடத்துவது தொடர்பான ஆலோசனைகளை துணை தேர்தல் கமிஷனர் அஜய் வழங்கினார். தேர்தல் விதிமுறைகள் தொடர்பான புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பணப்பட்டுவாடா, பரிசுப்பொருள் வழங்குவது தொடர்பான விதிமீறல்கள் குறித்து வந்த புகார்கள் மற்றும் அதில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றி தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம் அளித்தார். இந்த ஆலோசனை கூட்டம் ஒரு மணி நேரம் நடைபெற்றது.

முன்னதாக சென்னை தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு சத்யபிரத சாகு அளித்த பேட்டி வருமாறு, ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா தொடர்பாக பல தரப்பிலும் இருந்து புகார்கள் வருகின்றன. அரசியல் கட்சிகள், அமைப்புகள், வேட்பாளர்கள், தனி நபர்கள் தரப்பில் இருந்து இதுவரை தலைமை தேர்தல் அதிகாரியின் அலுவலகத்திற்கு 100-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. இதுபோன்ற புகார்கள் இந்திய தேர்தல் கமிஷனுக்கும், மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிக்கும் அனுப்பப்பட்டுள்ளன. எனது அலுவலகத்திற்கு வந்துள்ள புகார்களை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளேன். அந்த விளக்கங்கள் இந்திய தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்படும். இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று தேமுதிக தரப்பில் அளிக்கப்பட்ட புகாருக்கான விளக்கத்தையும் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் கேட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

வாக்குப்பதிவு நடப்பதற்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் பணப்பட்டுவாடா வேகம் எடுத்துள்ளது. எனவே ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலை நிறுத்த வேண்டும் என்ற குரல்களும் எழும்பியுள்ளன.முன்பு இதுபோன்ற குற்றச்சாட்டு எழுந்தபோது தேர்தலை நிறுத்திவைத்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. அதுபோல ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியிலும் இடைத்தேர்தலை ரத்து செய்து விட்டு வேறு தேதியில் இடைத்தேர்தலை நடத்த தேர்தல் கமிஷன் உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

Updated On: 23 Feb 2023 10:00 AM GMT

Related News