ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு போட்டி போட்டு பணம்,பரிசு மழை

ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு போட்டி போட்டு பணம்,பரிசு மழை
X

ஈரோடு கிழக்குத் தொகுதியில் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் ஸ்மார்ட் வாட்ச்சை படத்தில் காணலாம்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் 2 நாளே உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் போட்டிப் போட்டுக்கொண்டு பணம், பரிசு பொருட்களை வழங்கி வருகின்றனர்.

ஈரோடு கிழக்குத் தொகுதியில் இடைத்தேர்தலுக்கு இன்னும் 2 நாளே உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் போட்டிப் போட்டுக்கொண்டு பணம், பரிசு பொருட்களை வழங்கி வருகின்றனர். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ், அதிமுக வேட்பாளருக்கு இடையே தான் கடுமையான போட்டி நிலவி வருகிறது.

இந்த தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் வியூகம் அமைத்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். தொழிலாளர்கள் நிறைந்த இந்த தொகுதி வாக்காளர்கள் பலர் கடந்த 20 நாட்களாக வேலைக்கு செல்லாமல் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். வேலைக்கு செல்வதை விட அதிகளவில் வருமானம் வருவதால் மக்கள் பிரச்சாரத்தை தொழிலாகவே மாற்றிக் கொண்டனர். பிரச்சாரத்துக்கு செல்லும் பெண்களுக்கு தினமும் குறைந்தது ரூ.750 முதல் ரூ. 1000 வரை கிடைத்து வந்தது. பணிமனையில் அமர்ந்திருப்பவர்களுக்கு ரூ.500 கிடைக்கிறது.

இந்த நிலையில் ஒவ்வொரு பகுதியிலும் வாக்காளர்களுக்கு விதவிதமான பரிசுகள் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. குக்கர், வெள்ளி கால் கொலுசு, பட்டுபுடவை மற்றும் ஓட்டுக்கு ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் என வழங்கப்பட்டது. இதனால் வாக்காளர்கள் உற்சாகத்தில் உள்ளனர். சில இடங்களில் பட்டுபுடவை சரியில்லை என்று கூறி பெண்கள் வாக்குவாதம் செய்யும் காட்சிகளும் சமூக வலைதளத்தில் வெளியானது. மொத்தத்தில் இந்த தேர்தல் காரணமாக கிழக்கு தொகுதி வாக்காளர்களின் தனிநபர் வருவாய் அதிகரித்து இருக்கிறது. 20 நாள் பிரச்சாரம், ஓட்டுக்கு ரூ.5 ஆயிரம் என ஒவ்வொரு வாக்காளர்களும் சுமார் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை சம்பாதித்து உள்ளனர்.

இடைத்தேர்தல் தேதி நெருங்கும் நிலையில், பல்வேறு இடங்களில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் விநியோகம் படுஜோராக நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து பல்வேறு அமைப்புகள் தேர்தல் ஆணையத்துக்கு புகார்களையும் அனுப்பியுள்ளன.‌ குறிப்பாக வீரப்பன்சத்திரம், வளையக்கார வீதி, திருநகர் காலனி, கிருஷ்ணம் பாளையம், கே.ஏ.எஸ். நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு கட்சி வாக்காளர்களுக்கு ஸ்மார்ட் வாட்ச் வழங்கப்பட்டுள்ளதாகவும், மற்றொரு கட்சி சார்பில் பல்வேறு இடங்களில் பேண்ட், சட்டை, வேட்டி, சேலை, காமாட்சி விளக்கு போன்றவை வழங்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து தேர்தல் ஆணைய கட்டுப்பாட்டு அறைக்கும் பல்வேறு தரப்பில் இருந்தும் புகார்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன. இந்த தகவல்களின் அடிப்படையில், அலுவலர்களும் சோதனை மேற்கொண்டதாகவும் தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்து உள்ளனர்.தேர்தலுக்கு இன்னும் 2 நாட்கள் இருப்பதால் 2-வது தவணையாக ஏதாவது பணம் மற்றும் பரிசு பொருட்கள் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பில் வாக்காளர்கள் உள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!