பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றும் திமுகவுக்கு பாடம் புகட்டுங்கள்: ஜி.கே.வாசன்
ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட த.மா.க. தலைவர் ஜி.கே.வாசன்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர் ஈரோடு பி.பி.அக்ரஹாரம், ராஜாஜிபுரம், கள்ளுக்கடைமேடு ஆகிய இடங்களில் மக்கள் மத்தியில் இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவு கேட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது, அதிமுக ஆட்சியில் மக்கள் நிம்மதியாக இருந்தனர். அதிமுக ஆட்சியில் இருந்த போது செயல்படுத்தப்பட்ட தாலிக்குத் தங்கம், மடிக்கணினி, அம்மா கிளினிக் போன்ற திட்டங்ளை முடக்கி, ஏழையின் வயிற்றில் திமுக அடிக்கிறது.
கொரோனா காலத்துக்கு பிறகு தற்போதுதான் மக்கள் பொருளாதாரத்தில் சற்று உயர்ந்து வருகிறார்கள். அதற்குள் வீட்டு வரி, மின் கட்டணம், பால் விலை ஆகியன உயர்த்தப்பட்டு மும்முனை தாக்குதல் நடந்து உள்ளது. இதனால் பொருளாதாரத்தில் உயர்ந்து வந்த மக்களுக்கு சுமையை ஏற்றி மீண்டும் ஏழையாக மாற்றிய பெருமை தி.மு.க.வுக்கு சேரும். குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கப்படவில்லை. கியாஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கப்படவில்லை. நீட் தேர்வு ரத்து செய்யவில்லை. எனவே வெற்று வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றிய தி.மு.க. கூட்டணிக்கு இந்த இடைத்தேர்தலில் பாடம் கற்பிக்க வேண்டும். அதற்கு நீங்கள் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்.
இந்தியாவின் பொருளாதார உயர்விலே இஸ்லாமியர்கள் பங்கு மிகப்பெரியது. அத்தகைய இஸ்லாமிய மக்களுக்கு அண்ணா தி.மு.க. அரணாக இருந்து வருகிறது. அவர்களுக்கு பாதிப்பு என்றால், அண்ணா திமுக-வும், த.மா.கா.வும் உடனே குரல் கொடுத்து வருகிறோம். இஸ்லாமியர்களின் உயர்வு நாட்டின் உயர்வு என்று கருதுகிறோம். இஸ்லாமியர்களுக்கு அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் நாம் எதிர்பார்க்கும் நல்ல முடிவு கிடைக்கும். இந்த தொகுதியில் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் மக்களை அவமதிக்கத் தொடங்கிவிட்டன. ஏழை மக்களுக்கு அழுத்தம் கொடுத்து, ஏமாளியாக்கி பட்டியில் பூட்டி வைத்து தரக்குறைவாக நடத்து கின்றனர். இது ஜனநாயகம் அல்ல; பணநாயகம். இங்கு அநியாயத்தின் அடிப்படையில் தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் தர்மம் ஜெயிக்க வேண்டுமா; அதர்மம் ஜெயிக்க வேண்டுமா என மக்கள் முடிவு எடுக்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பிரசாரத்தின்போது முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.வி.ராமலிங்கம், காமராஜர், த.மா.கா. இளைஞர் அணி மாநில தலைவர் யுவராஜா, த.மா.கா. மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர், துணைத்தலைவர் ஆறுமுகம், செயற்குழு உறுப்பினர் சந்திரசேகர், ஈரோடு மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார், மாநில நிர்வாகி கவுதமன் உள்பட பலர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu