ஈரோட்டில் நடந்த உயர்வுக்கு படி நிகழ்ச்சியில் சேர்ந்த 43 மாணவ, மாணவிகள்
ஈரோடு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்திய கல்விக் கடன் முகாமில், கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு கல்விக் கடனுக்கான அனுமதி ஆணைகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வழங்கினார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற உயர்வுக்குப் படி நிகழ்ச்சியில் இன்று (11ம் தேதி) உடனடியாக 43 மாணவ, மாணவியர்கள் உயர் படிப்பிற்காக கல்லூரியில் சேர்ந்தனர்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், 2022-23 மற்றும் 2023-24ம் கல்வியாண்டில் உயர்கல்வி தொடராத 12 ஆம் வகுப்பு முடித்த மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி தொடர்வதற்கு ஏதுவாக நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்வுக்குப் படி 2024 முகாமினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா துவக்கி வைத்தார்.
பின்னர், அவர் தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு முதலமைச்சரின் கனவுத் திட்டமான நான் முதல்வன் -உயர்வுக்குப்படி என்ற நிகழ்ச்சியின் மூலம் 12-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவியர்கள் மற்றும் உயர் கல்விக்கு விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் உயர்வுக்குப் படி சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது வருகிறது.
இன்று நடைபெற்ற உயர்வுக்கு படி நிகழ்ச்சியில் 52 கல்லூரிகள் அரங்குகள் அமைத்து கலந்து கொண்டனர். உயர்வுக்கு படி நிகழ்ச்சியில் 148 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். இதில் 43 மாணவ, மாணவியர்களுக்கு மேற்படிப்புக்காக கல்லூரியில் உடனடியாக சேர்க்கை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 22 மாணவ, மாணவியர்கள் பல்வேறு திறன் பயிற்சிகளிலும், 8 மாணவ, மாணவியர்கள் படிக்கும் காலத்திலேயே வருமானம் ஈட்டும் உயர் படிப்பிலும் சேர்ந்துள்ளனர்.
மேலும், ஏற்கனவே, கல்விக் கடனுக்காக விண்ணப்பித்தவர்களில் 180 மாணவ, மாணவியர்கள் நேரடி சரிபார்ப்புக்காக கலந்து கொண்டனர். அதில் 20 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.50 லட்சம் கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற முகாமில் 10 மாணவ, மாணவியர்கள் கல்வி கடனுக்காக இணையதளத்தில் விண்ணப்பித்துள்ளார்கள்.
மேலும், விண்ணப்பிக்க தவறியவர்கள், மருத்துவம், பொறியியல், இதர தொழில் படிப்புகள், கலை, அறிவியல் மற்றும் பிற படிப்புகளுக்கு வங்கியில் கல்விக்கடன் பெறுவதற்கு www.vidyalakshmi.co.in மற்றும் Jansamarth.in என்ற இணையதளம் வாயிலாக மாணவ, மாணவியர்கள் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு அரசின் மூலம் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தமிழ்ப்புதல்வன் மற்றும் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. மாணவ, மாணவியர்கள் கல்லூரி படித்து முடித்த பின்பு அடுத்து என்ன செய்யலாம் என்ற வழிகாட்டுதல்களும் வழங்கப்படுகிறது.
இம்முகாமிற்கு வருகை தந்துள்ள பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் மேற்படிப்பிற்கான சேர்க்கை பெற்று செல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன். மாணவ, மாணவியர்களுக்கு கல்வி தான் முக்கியம். எனவே, பள்ளி இடைநின்ற மற்றும் மேற்படிப்புக்கு விண்ணப்பிக்காத மாணவ, மாணவியர்கள் இச்சிறப்பான வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டு, வாழ்க்கையில் உயர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஃபைனல் லிஸ்ட்... டிக் அடித்த விஜய்! இனி நேரா ஷூட்டிங்தானாம்..!
இம்முகாமில், உயர்கல்வியின் அவசியம், உயர்கல்வி குறித்த ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல், பெண்கல்வியின் அவசியம் மற்றும் தமிழ்நாடு அரசு வழங்கும் சலுகைகள், கல்வி கடன், வேலைவாய்ப்புகள் ஆகியவை குறித்து உயர் அலுவலர்கள் விரிவாக எடுத்துரைத்தனர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, முதன்மை கல்வி அலுவலர் சம்பத்து, ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சதீஸ்குமார், மாவட்ட சமூக நல அலுவலர் சண்முக வடிவு, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராஜ் குமார், கோவை மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) ஜோதிமணி, உதவி இயக்குநர்கள் ஆனந்தகுமார் (மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம்), ராதிகா (மாவட்ட வேலைவாய்ப்பு), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முஹம்மது குதுரத்துல்லா, துணை ஆட்சியர் (பயிற்சி) சிவபிரகாசம், தொழில்நெறி வழிகாட்டுநர் (பாரதியார் பல்கலைக்கழகம்) கௌதம் உட்பட வங்கியாளர்கள், பல்வேறு கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu