திம்பம் மலைப்பாதையில் அதிகாலை சிறுத்தை உலா: வாகன ஓட்டிகள் பீதி

திம்பம் மலைப்பாதையில் அதிகாலை சிறுத்தை உலா: வாகன ஓட்டிகள் பீதி
X

திம்பம் மலைப்பாதை சாலையில் உலா வந்த சிறுத்தை.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதை சாலையில் உலா வந்த சிறுத்தையால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, ஆசனூர், கேர்மாளம் உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, கரடி, மான் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

தற்போது சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதனால் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள கிராம பகுதிகளில் புகுந்து ஆடு, மாடு, நாய்கள் போன்றவற்றை சிறுத்தை அடித்து கொன்று வருகிறது.

குறிப்பாக சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதி வழியாக தமிழக- கர்நாடகத்தை இணைக்கும் முக்கிய மலைப்பாதையான திம்பம் மலைப்பாதை உள்ளது. இந்த திம்பம் மலைப்பாதையை அவ்வப்போது வனவிலங்குகள் கடந்து செல்வது வழக்கம். இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை திம்பம் மலைப்பாதை 25-வது கொண்டை ஊசி வளைவில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை ஒன்று சாலையில் நடந்து சென்றது.

சிறுது நேரம் சாலையில் நடந்து சென்ற சிறுத்தை தடுப்பு சுவற்றில் நடந்து சென்று, பின்னர் வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. இந்த வீடியோ காட்சிகளை அவ்வழியாக வாகனத்தில் பயணித்த வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து, சிறுத்தை அடிக்கடி திம்பம் மலைப் பாதையில் நடமாடுவதால் வாகன ஓட்டிகள் மெதுவாகவும், எச்சரிக்கையுடனும் செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!