ஈரோட்டில் நாளை திமுக மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
ஈரோடு மாவட்ட திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா நாளை (21ம் தேதி) பெருந்துறையில் நடக்கிறது. விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார்.
தமிழகம் முழுவதும் திமுக மூத்த உறுப்பினர்கள், நிர்வாகிகளை பாராட்டி கவுரவிக்கும் வகையில், பொற்கிழி வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டந்தோறும் தேர்வு செய்யப்பட்டு இதற்கான விழா நடத்தப்படுகிறது. இந்த நிலையில், இவ்விழாவின் ஒரு பகுதியாக திமுக ஈரோடு வடக்கு, தெற்கு மாவட்டங்களை ஒருங்கிணைத்து பொற்கிழி வழங்கும் விழா பெருந்துறை அடுத்துள்ள சரளையில் கடந்த 17ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால், சட்டசபை சிறப்பு கூட்டம் நடைபெற்றதால், விழா ஒத்தி வைக்கப்பட்டு 21ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதன்படி, நாளை (21ம் தேதி) காலை 10 மணிக்கு விழா நடக்க உள்ளது. இதற்காக அங்கு பிரமாண்ட அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. விழாவில் ஒருங்கிணைந்த மாவட்டத்தை சேர்ந்த சுமார் 2,500 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பொற்கிழியை திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வழங்கி கவுரவித்து சிறப்புரையாற்றுகிறார். இவ்விழாவில் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர். முன்னதாக அரங்கில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியை பார்வையிட உள்ளார். இதனைத் தொடந்து அருகில் அமைக்கப்பட்டுள்ள மற்றொரு அரங்கில் ஈரோடு தெற்கு, வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி செயல்வீரர் கள் கூட்டம் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரையாற்ற உள்ளார். மேலும் டிசம்பர் மாதம் சேலத்தில் நடக்க உள்ள திமுக இளைஞரணி 2வது மாநில மாநாடு ஏற்பாடுகள் குறித்தும், இளைஞரணி உறுப்பினர் சேர்ப்பு உள்ளிட்டவைகள் குறித்து நிர்வாகிகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu