ஈரோட்டில் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

Erode news- தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா.
Erode news, Erode news today- போக்குவரத்து துறையின் சார்பில் தனியார் பள்ளி வாகனங்களுக்கான வருடாந்திர கூட்டாய்வு ஈரோடு மாவட்டம் பவளத்தான்பாளையம், ஏஈடி பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்றது. இந்த பணியினை, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு மோட்டார் வாகன சிறப்பு விதிகளின்படி, ஒவ்வொரு ஆண்டும் பள்ளி வாகனங்களில் ஆய்வு மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளைச் சார்ந்த தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, இன்று ஈரோடு மாவட்டம் பவளத்தான்பாளையம், ஏஈடி பள்ளி வளாகத்தில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு மற்றும் பெருந்துறை பகுதிகளில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களுக்கான வருடாந்திர கூட்டாய்வு பணியினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.
இதில், தனியார் பள்ளிகளில் செயல்படக்கூடிய வாகனங்களில் அரசின் விதிமுறைகளின்படி, வாகனங்களின் பிளாட்பாரம், இருக்கைகள், வேக கட்டுப்பாட்டு கருவி, அவசர கால வழி கதவு, தீயணைப்பு கருவி, முதலுதவி பெட்டி, முதலுதவி உபகரணங்கள், வாகனத்தில் முன், பின் பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா எனவும், மேலும் பல்வேறு பாதுக்காப்பு வசதிகளுடன் இயக்கப்படுகிறதா என்பது குறித்தும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது வாகனங்களில் ஆவணங்கள், மேற்கண்டவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அனுமதி அளிக்கப்படும். மேலும், இந்த ஆய்வுகளில், வாகனங்களில் புத்தகப்பை வைக்கும் தனி இடம், பள்ளி எம்பலம், காவல்துறை, வட்டார போக்கு வரத்து அலுவலர் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் தொலைபேசி எண்கள், படிகட்டு உயரம், லாக்புக், ஜன்னல் கம்பிகள், ஓட்டுநர் கேபின், கதவுடன் இடதுபக்க வழி உள்ளிட்டவை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, பெருந்துறை ஆகிய வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் 99 பள்ளிகளைச் சேர்ந்த 980 வாகனங்களில் வருடாந்திர கூட்டாய்வு நடைபெற்றது. மேலும், கடந்த 3ம் தேதி முதல் 8ம் தேதி வரை கோபிசெட்டிபாளையம், பவானி, சத்தியமங்கலம் பகுதிகளில் செயல்படும் 95 பள்ளிகளைச் சேர்ந்த 751 வாகனங்களில் 556 வாகனங்களுக்கு கூட்டாய்வு நடைபெற்றது.
இதில், சிறு குறைபாடுகளுடைய பள்ளி வாகனங்கள் கண்டறியப்பட்டு குறைகளை நிவர்த்தி செய்ய திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், ஒரு வாரத்திற்குள் குறைகளை நிவர்த்தி செய்ய மீண்டும் ஆய்விற்கு கொண்டுவர அறிவுறுத்தப்பட்டது. மேலும், கோபிசெட்டிபாளையத்தில் தீயணைப்பு துறையின் சார்பில் நடைபெற்ற தீ தடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தீயணைப்பு வீரர்கள் பேருந்துகளில் ஏற்படும் தீயிணை அணைப்பது குறித்து ஓட்டுனர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது என்றார்.
இந்த ஆய்வின்போது, வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் வெங்கடரமணி (ஈரோடு கிழக்கு), பதுவைநாதன் (ஈரோடு மேற்கு), சக்திவேல் (பெருந்துறை), மோட்டர் வான ஆய்வாளர்கள் மற்றும் பெருந்துறை துணை காவல் கண்காணிப்பாளர் கோகுலகிருஷ்ணன், ஈரோடு வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu