சென்னிமலை அருகே தொழில் நிறுவனங்களில் ஈரோடு ஆட்சியர் ஆய்வு
Erode news- முகாசிபிடாரியூர் கூத்தம்பாளையத்தில் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்று செயல்பட்டு வரும் பி.வி.சி. கதவு தயாரிப்பு நிறுவனத்தில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்ட போது எடுத்த படம்.
Erode news, Erode news today- ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் முகாசிபிடாரியூர் ஊராட்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனம் சார்பில், மானிய கடனுதவியுடன் செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்களை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (4ம் தேதி) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு அரசின் சார்பில், ஈரோடு மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனம் மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பல்வேறு மானியத்துடன் கூடிய கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் முகாசிபிடாரியூர் கூத்தம்பாளையத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரக் கொள்கை 2021ன் கீழ், சிறப்பு தொழிலுக்கான முதலீட்டு மானியமாக ரூ.1.50 கோடி அனுமதிக்கப்பட்டு 2023-24 ஆண்டில் ரூ.50 லட்சம் பெற்ற சர்வேஷ் மல்டி பிளாஸ்ட் பிரைவேட் லிட், நிறுவனத்தை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு செய்தார்.
இந்நிறுவனம் பிவிசி மற்றும் யுபிவிசி ஜன்னல்கள் மற்றும் கதவுகள் தயாரிக்கும் தொழிலை விரிவுபடுத்த எஸ்ஐடிபிஐ ஈரோடு வங்கிக்கடன் மூலம் புதிய இயந்திரங்களை நிறுவுவதற்கு தமிழக அரசின் சிறப்பு முதலீட்டு மானியம் 25 சதவீதம் ரூ.1.50 கோடி அனுமதிக்கப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து, தமிழக அரசின் சிறப்புத் திட்டமான புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சங்கர் என்பவர் முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கான ரூ.24.50 லட்சம் முதலீட்டில் ரூ.6.12 லட்சம் மானியத்துடன் வங்கிக் கடனுதவியுடன் தொடங்கப்பட்ட பருத்தி மறு சுழற்சி நிறுவனத்தையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுகளின்போது, தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், தொழில் நிறுவனத்தினர் கடன் தவணைத் தொகையினை குறிப்பிட்ட காலத்திற்குள் முறையாக செலுத்தி வருவதாகவும், தொழில் லாபகரமாக இயங்கி வருகிறது என்றும் தெரிவித்தனர்.
இந்த ஆய்வுகளின்போது, பொது மேலாளர் (மாவட்ட தொழில் மையம்) திருமுருகன் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu